Published : 23 Oct 2020 12:12 PM
Last Updated : 23 Oct 2020 12:12 PM

7.5% உள் ஒதுக்கீடு: ஒப்புதல் வழங்குவது ஆளுநரின் ஜனநாயகக் கடமை- தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவுக்குக் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த உள் இடஒதுக்கீடுக் கோரிக்கையை தமிழக சட்டப்பேரவையில் முதலில் எழுப்பியது நாங்கள்தான். அந்த வகையில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதி காட்டுகிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சார்பில், மக்கள் பிரதிநிதிகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஆளுநரின் ஜனநாயகக் கடமையாகும்.

எளிய மக்களின் நலன் காக்கும் ஒரு சமூக நீதி விவகாரத்தில், முடிவெடுப்பதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இச்சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் நோக்கமும் கொண்டதாக இருக்கிறது.

இம்மசோதா குறித்து சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்தபோது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருகிறோம் என அவர் சொன்னதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்துத் தமிழக அமைச்சர்கள் விளக்க வேண்டும்.

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையேல் மக்கள் ஆதரவுடன் ஜனநாயக வழிப் போராட்டங்கள் வலிமை பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதையும் எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறோம்."

இவ்வாறு தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x