Published : 08 Oct 2020 07:36 AM
Last Updated : 08 Oct 2020 07:36 AM

முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்காக ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த முதல்வர் பழனிசாமி: வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களும் வாழ்த்து பெற்றனர்

முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு நேரில் சென்று முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று பல வாரங்களாக நீடித்துவந்த சர்ச்சை நேற்று ஓய்ந்தது. முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பழனிசாமியை முன்னிறுத்துவதாக அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று காலை அறிவித்தார். முன்னதாக, அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு குறித்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டார்.

அதன்பிறகு இபிஎஸ், ஓபிஎஸ்உள்ளிட்ட அனைவரும், முன்னாள்முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர். பிறகு,வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்த ஓபிஎஸ்மற்றும் நிர்வாகிகளுக்கு ட்விட்டர்வாயிலாக இபிஎஸ் நன்றி தெரிவித்தார். ‘‘எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தில், ஜெயலலிதா இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. கட்சியை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லவும், ஜெயலலிதா கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்துக்கும் கட்சியை வெற்றி இயக்கமாக உருவாக்கவும் அயராது உழைப்பேன்’’ என்று ட்விட்டர் பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை 5.55 மணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் இல்லத்துக்கு முதல்வர் பழனிசாமி வந்தார். ஓபிஎஸ்ஸின் மகனும் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் ஒரு புத்தகத்தை வழங்கி முதல்வரை வரவேற்றதுடன், முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஓபிஎஸ் பூங்கொத்து வழங்கி முதல்வரை வரவேற்றார்.

தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்காக ஓபிஎஸ்ஸுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் வழிகாட்டுதல் குழுவில் உள்ள அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அதிமுக பொதுக்குழு, கட்சியில் அதிகாரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

பின்னர், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் விடைபெற்றுக் கொண்ட முதல்வர், பசுமைவழிச் சாலையில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபாலின் இல்லத்துக்கு சென்று, மரியாதை நிமித்தமாக அவரையும் சந்தித்தார்.

மீண்டும் சந்திப்பு

முன்னதாக, அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை உருவான நிலையில், கடந்த செப்.28-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இரு தரப்பினருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு, முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை துணைமுதல்வர் ஓபிஎஸ் தவிர்த்தார். அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில், ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் பங்கேற்றனர். அப்போது, இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தாலும், அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதன்பிறகு,நேற்றுதான் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். மாலையில் ஓபிஎஸ் வீட்டுக்கு முதல்வர் நேரிலேயே வந்து நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x