Published : 08 Oct 2020 07:26 AM
Last Updated : 08 Oct 2020 07:26 AM

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி: மழைநீர் வடிகால்களை ரூ.15 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் ரூ.15 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்திஉள்ளது. நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சிக்கு உட்பட்ட 210 நீர்நிலைகளில் தூர்வாருதல் மற்றும்புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 133நீர்நிலைகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளன. 50 நீர்நிலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 27 நீர்நிலைகளில் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன. கூவம், அடையாறு மற்றும் கால்வாய்களின் கரையோரங்களில் வசிக்கும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பருவமழைக் காலங்களில் வடிகால்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் ரூ.15 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 48 கிமீ நீளமுள்ள 30 நீர்வரத்து கால்வாய்கள் நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கக்கூடிய இடங்களாக 2015-ம் ஆண்டு 306 இடங்களும், 2017-ம் ஆண்டு 205 இடங்களும், 2018-ம் ஆண்டு 53 இடங்களும், 2019-ம் ஆண்டு 19 இடங்களும் கண்டறியப்பட்டன. தற்போது 3 இடங்களில் மட்டுமே நீர் தேங்கும்வாய்ப்பு உள்ளது. மாநகராட்சியில் 406 கிமீ நீளத்துக்கு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள்மற்றும் குளங்கள் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சென்னையில் நீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பருவமழைக் காலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 சுரங்கப் பாதைகளில் 60 உயர்திறன் கொண்ட பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 2 வாகனங்களுடன் பொருத்தப்பட்ட மர அறுவை இயந்திரங்கள், 160 டீசல் மற்றும் பெட்ரோல் மூலம்இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், 11 மின்சாரம் மூலம் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள் அந்தந்த மண்டலங்களில் தயார்நிலையில் உள்ளன.

109 இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள படகுகள் மற்றும் தொடர்புடைய நபர்களின் விவரங்கள், 176 இடங்களில் நிவாரண மையங்கள், நடமாடும் மற்றும் நிரந்தரமான 44 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பயிற்சி பெற்ற 200 சமூக தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x