Published : 05 Oct 2020 08:02 PM
Last Updated : 05 Oct 2020 08:02 PM

கோவிட் தொற்று காரணமாக கடும் நிதிச்சுமை; ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.4,321 கோடியை ஒரே தவணையில் வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்  வலியுறுத்தல்

கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதிச்சுமையைக் குறைக்க அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தமிழகத்திற்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ள ரூ.4,321 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-வது கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஆற்றிய உரை:

“ ஜூன் 12 அன்று நடைபெற்ற 40-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் மற்றும் ஆகஸ்டு 27 அன்று நடைபெற்ற 41-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தின் வரைவு அறிக்கைகளை (Draft Minutes) நான் இங்கு உறுதிப்படுத்துகிறேன்.

2017-18 ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை முடிவு செய்து, தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவையாக ரூ.4,321 கோடி வழங்கப்பட வேண்டும் என ஒப்புக் கொண்டுள்ளது.

அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதிச்சுமையைக் குறைக்க இம்மாநிலத்திற்குப் பேருதவியாக இருக்கும். எனவே, அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அதைச் செயல்படுத்தி நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிற்கு 2020-21 ஆம் ஆண்டில், ஜூலை 2020 வரையிலான காலத்திற்கு ரூ.12,258.94 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டியுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது மிகவும் அவசியமாகும்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசுக்கு தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை உள்ளது என்பதே எங்கள் நிலைப்பாடு. மேல்வரி வசூலில் பற்றாக்குறை ஏற்பட்டால், மாநிலங்களுக்கு ஈடுசெய்யத் தேவையான நிதியை இந்திய அரசு அடையாளம் காண வேண்டும் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டி, 41-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தின் வாயிலாக, இந்திய அரசு நிதி ஆதாரங்களைத் திரட்டி, தேவையான நிதியை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நிதியத்திற்கு வழங்க முடியும் என்று நான் பரிந்துரைத்தேன்.

2021-22 ஆம் ஆண்டிற்குப் பிறகும் சில ஆண்டுகளுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் மேல்வரியை நீட்டித்து கடனை வழங்க முடியும். இது அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட ஒரு நியாயமான மற்றும் நடைமுறைபடுத்தக்கூடிய ஆலோசனையாகும். இதன் தொடர்பாக, நமது முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், இது இந்திய அரசால் ஏற்கப்படவில்லை. 27.08.2020 அன்று நடைபெற்ற முந்தைய மன்றக் கூட்டத்தில், மதிப்பிற்குரிய மன்றத்தலைவர் இரண்டு விருப்பத் தேர்வுகளை மாநிலங்களுக்கு அளித்தார். இந்த இரண்டு விருப்பத் தேர்வுகளும் மாநிலங்கள் சந்தையிலிருந்து கடன் பெறுவது தொடர்பானவை ஆகும்.

2020-21 ஆம் ஆண்டில் மொத்த கடன் தொகையை கட்டுப்படுத்தும் முயற்சியில், விருப்பத் தேர்வு 1-இன் கீழ் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி செயல்படுத்தல் தொடர்பான இழப்புகள் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு இடையே ஒரு வேறுபாடு உருவாக்கப்பட்டது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கணக்கின் கீழ் மட்டுமே இழப்புகளைக் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த மதிப்புமிக்க மன்றம் மிகவும் முக்கியமானதாக கருதிய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசிடையே உள்ள நுட்பமான சமநிலை ஒப்பந்தத்தை மீறுவதாக அமையும்.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டம், 2017-ன் செயல்பாட்டு பிரிவுகளின் கீழ், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலாக்கம் மூலம் மட்டுமே இல்லாதிருந்தாலும், வருவாய் வசூல் முழுவதிலும் உள்ள பற்றாக்குறைக்கு இழப்பீடு செலுத்தப்பட வேண்டும் என்று முன்னர் சுட்டிக்காட்டப்பட்ட குறிப்பில் தெளிவாகவும் மற்றும் வெளிப்படையாகவும் உள்ள அறிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மேலும், நான் குறிப்பிட்டுள்ள இந்த நிலைப்பாடு மத்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அட்டார்னி ஜெனரலால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலுவைப் பற்றாக்குறையை அடுத்தடுத்த ஆண்டுகளில் சரி செய்ய இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இந்த நிலைப்பாடு, மாநிலங்களுக்கு உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

இழப்பீட்டுத் தொகையை முழுமையாக நடப்பு நிதியாண்டில் விடுவிப்பது சாத்தியமில்லை என்று நான் அறிவேன். ஆனால் இந்த இழப்பீட்டிற்கான கணக்கீடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பினை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், நடப்பு நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இழப்பீட்டின் ஒரு பகுதியை மட்டுமே மாநிலங்கள் பெறக்கூடிய சூழ்நிலை தற்போது உள்ளது. மேலும், விருப்பத்தேர்வு 1-இல் 10 சதவீத சாதாரண வளர்ச்சியைக் கருதுவது மிகவும் செயற்கையானது மற்றும் தேவையற்றது என்று மத்திய நிதிச் செயலாளர் நடத்திய கூட்டத்தில் மாநில அரசுகள் சுட்டிக்காட்டியிருந்தன. எனவே, அதற்குப் பதிலாக, விருப்பத்தேர்வு 1-இன் கீழ் இந்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் மொத்த இழப்பின் உரிய விகிதத்தின் அடிப்படையில் மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையினை மதிப்பிடப்பட வேண்டும். விருப்பத்தேர்வு 2 ஆனது முற்றிலும் நடைமுறைக்கு இயலாததாகவும், அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள இயலாததாகவும் உள்ளது.

பெரும்பாலான மாநிலங்கள் விருப்பத் தேர்வு 1-க்கு உடன்படும் சூழ்நிலையில், மாநிலங்களின் வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பீட்டின் அதிகபட்ச சதவீதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மறுகணக்கீடு செய்யப்படும் என்கிற நம்பிக்கையில் தமிழகமும் விருப்பத் தேர்வு 1-ஐத் தேர்வு செய்துள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் அடித்தளமாக இருக்கும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாத்து, உரிய நேரத்தில் மாநிலத்திற்கு இழப்பீடு வழங்குவதிலும், ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகையை விரைவாக அளித்திடவும், உங்கள் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறேன்”.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x