Published : 05 Oct 2020 06:00 PM
Last Updated : 05 Oct 2020 06:00 PM

மருத்துவப் படிப்பில் அரசு மாணவர்களுக்கு  இட ஒதுக்கீடு: ஆளுநர் இன்னும்  காலதாமதம் செய்வதா?- ராமதாஸ் கண்டனம் 

அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் இருப்பதுதான், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வற்குக் காரணமாக இருக்குமோ? என ஐயப்படத் தோன்றுகிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 21 நாட்கள் ஆகும் நிலையில், அச்சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மாணவர்கள் நலன் சார்ந்த விஷயத்தில் ஆளுநர் தேவையின்றி காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்தச் சட்டம் சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் அச்சட்டம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஓரிரு நாட்களில் ஆளுநர் ஒப்புதல் அளித்து விடுவார்; அரிதிலும் அரிதாக ஏதேனும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகலாம். ஆனால், 3 வாரங்கள் முடிந்தும் ஒரு முக்கியமான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் இருப்பதுதான், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வதற்குக் காரணமாக இருக்குமோ? என ஐயப்படத் தோன்றுகிறது. அவ்வாறு ஐயப்படுவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. ஏனெனில், இப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வருவதை விரும்பவில்லை என்பது போன்றுதான் ஆளுநர் மாளிகையின் செயல்பாடுகள் தொடக்கம் முதலே அமைந்துள்ளன.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முதலில் சட்டம் கொண்டு வரப்படவில்லை. கடந்த ஜூலை - ஆகஸ்ட் மாதங்களிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், அதற்குள்ளாக சட்டம் நிறைவேற்ற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கும்படி ஜூன் 15 ஆம் தேதி அமைச்சரவை கூடி ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.

அதையும் அரசு நேரடியாக செய்யவில்லை. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பொன். கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் சட்ட ஆலோசனை பெற்றது.

ஆனாலும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுத்துவிட்டார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்கினால் போதுமானதல்ல. மாறாக, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி வழங்கப்படும் 25% இடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசரச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை யோசனை தெரிவித்தது.

அதையேற்று அவசர சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த ஜூலை 15 ஆம் தேதி தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பிறகும் இரு மாதங்களாக அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில்தான் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகும் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தயங்குவது ஏன்?

ஆளுநர் மாளிகையின் இந்தத் தேவையற்ற தாமதம்தான், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சமூக நீதி வழங்கப்படுவதில் ஆளுநருக்கு விருப்பம் இல்லையோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பது ஆளுநர் மாளிகையில் இருப்பவர்களுக்கு புரியாது; அடித்தட்டு மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த சமூக நீதியாளர்களுக்குத்தான் அது புரியும்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன. முதன்முதலில் நீட் அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2018-19 ஆம் ஆண்டில் 4 மாணவர்களுக்கும், 2019-20 ஆம் ஆண்டில் 5 மாணவர்களுக்கும் மட்டும்தான் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே 7.5% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது.

நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அதன் முடிவுகள் அடுத்த ஒரு வாரத்தில், அதாவது வரும் 12-ம் தேதி வெளியிடப்படவுள்ளன. அதற்கு முன்பாகவோ, முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களிலோ மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிட வேண்டும். இத்தகைய சூழலில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது. மருத்துவக் கல்வி கனவாகிப் போன அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சமூக நீதி வழங்க ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது.

எனவே, தமிழக ஆளுநர் இனியும் தாமதிக்காமல், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிறைவேற துணை நிற்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x