Last Updated : 18 Sep, 2015 12:00 PM

 

Published : 18 Sep 2015 12:00 PM
Last Updated : 18 Sep 2015 12:00 PM

தகவல் ஆணையங்களின் ஆண்டறிக்கை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம்: தேசிய அளவில் 3-ம் இடத்தில் தமிழகம்

நாடு முழுவதும் மாநில தகவல் ஆணைய ங்களின் ஆண்டறிக்கை பல ஆண்டுகளாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தாமதப் பட்டியலில் தேசிய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக தகவல் அறியும் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் உட்பிரிவுகள் 1 முதல் 5-ல் மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த ஆண்டறிக்கையில் தகவல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள், தகவல் உரிமை சட்டத்தின் சேவை மேம்பாட்டுக்கான ஆலோசனைகள், ஒவ்வொரு ஆண்டிலும் பெறப்பட்ட மேல்முறையீடுகள், தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களும் இருக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிப்படி தகவல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆண்டறிக்கை பதிவேற்றம் செய்யப்படுவதில்லை.

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து தகவல் ஆணையங்களின் இணையதளங்களை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மாநில ஆணையங்கள் ஆண்டறிக்கையை பதிவேற்றம் செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகம் 3-வது இடம்

மத்திய தகவல் ஆணையம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மிசோரம், நாகாலாந்து மாநில தகவல் ஆணையங்களின் இணையதளத்தில் 2014 வரையிலான ஆண்டறிக்கை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், இமாசலப்பிரதேசம், கர்நாடகம், மேகாலயா, சிக்கிம் மாநிலங்களில் 2013-ம் ஆண்டு வரையும், ஜார்க்கண்ட், கேரளம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் 2011-ம் ஆண்டு வரையும், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் 2009-ம் ஆண்டு வரையும் ஆண்டறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக தகவல் ஆணையத்தின் இணையதளத்தில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டறிக்கை பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆந்திரத்தில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகும், ஹரியாணாவில் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டறிக்கை பதிவேற்றம் செய்யப்படவில்லை. இந்த தாமதத்தில் தேசிய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் தகவல் அறியும் ஆர்வலர்கள் அரசு துறைகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர்.

ஆதரவு அதிகாரிகளால் தாமதம்

இது குறித்து மதுரையை சேர்நத தகவல் அறியும் ஆர்வலரும், போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநில நிர்வாகியுமான எஸ்.சம்பத் கூறியதாவது:

மத்திய தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை மக்களவையிலும், மாநில ஆணை யங்களின் ஆண்டறிக்கை சட்டப்பேரவையிலும் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டிய ஆணையங்கள், ஆண்டறிக்கையை பதிவேற்றம் செய்வதில் மிக தாமதமாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

பொது பணிகள் சார்ந்த பிரமுகர்கள் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டது வரை இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்பட்டது. பின்னர் அரசுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டதும், ஆண்டறிக்கை தயாரிப்பு என்பது நின்றுவிட்டது. தகவல் ஆணையங்கள் உடனடியாக ஆண்டறிக்கைகளை தயாரித்து நிலுவையின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார்.

பொள்ளாச்சியை சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பாஸ்கரன் கூறும்போது, பல மாநில ஆணையங்கள் ஒப்புக்கு செயல்படுபவையாக இருக்கின்றன. ஆண்டறிக்கையை தாக்கல் செய்தால் அந்த ஆணையங்களின் செயல்பாடுகளில் இருக்கும் சுணக்கம் தெரிந்துவிடும் என்பதால் தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றிருப்பது வேதனையாக உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x