Last Updated : 09 Sep, 2015 03:44 PM

 

Published : 09 Sep 2015 03:44 PM
Last Updated : 09 Sep 2015 03:44 PM

உப்பு உற்பத்தி 50 சதவீதம் சரிவு: 2 நாட்களாக பெய்யும் மழையால் மேலும் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 50 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தியாகியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்யும் மழை உப்பு உற்பத்தியாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாறு, தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது.

ஏப்ரலில் பாதிப்பு

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலம். அக்டோபர் மாதம் மத்தியில் சீஸன் முடிவடையும்.

இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கியது. இடையில் மே மாதம் பெய்த கோடை மழையால் ஒரு மாதம் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது.

பழைய உப்பு கையிருப்பு இல்லாததால், தூத்துக்குடி மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் குஜராத் மாநிலத்தில் இருந்து கச்சா உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

உற்பத்தியாளர் கலக்கம்

ஜூன் மாதம் முதல் வாரத்தில்தான் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கியது. கடந்த 3 மாதங்களாக உற்பத்தி நல்ல நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுவரை உப்பு உற்பத்தி இருந்தது.

இந்த ஆண்டும் அவ்வாறு உப்பு உற்பத்தி இருக்கும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்யும் மழை உற்பத்தியாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாகவே இந்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கான எந்த அறிகுறியும் இல்லை என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதிலும், உப்பு சீஸன் முடிவடைவதற்கான அறிகுறியாகவே இந்த மழையை உப்பு உற்பத்தியாளர்கள் பார்க்கின்றனர்.

பணிகள் பாதிப்பு

தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறும்போது, ‘கடந்த மே மாதம் பெய்த மழை காரணமாக ஒரு மாதம் உப்பு உற்பத்தி அறவே நடைபெறவில்லை. வழக்கமாக அக்டோபர் முதல் வாரம் வரை உப்பு உற்பத்தி இருக்கும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்திலேயே மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மழை காரணமாக உப்பு வாரும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உப்பின் தரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

12 லட்சம் டன் உற்பத்தி

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 12 லட்சம் டன் மட்டுமே உப்பு உற்பத்தியாகியுள்ளது.

இது 45 முதல் 50 சதவீதம்தான். வழக்கம் போல் இன்னும் 5 வாரங்கள் சீசன் தொடர்ந்தால் மேலும் 15 சதவீதம் வரை உற்பத்தியாகும். உப்பு உற்பத்தி குறைந்த போதிலும் விலை பெரிய அளவில் இல்லை’ என்றார் அவர்.

தூத்துக்குடி உப்பளத்தில் அறுவடையான உப்பை அம்பாரமாக குவித்து, மழையில் இருந்து அதனை காக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x