Published : 23 Sep 2015 07:33 AM
Last Updated : 23 Sep 2015 07:33 AM

வயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்தன: மருமகனை துப்பாக்கியால் சுட்ட எஸ்.ஐ. சிறையில் அடைப்பு

மந்தைவெளியில் மருமகனை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சுட்டதில் மருமகன் வயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்தன.

சென்னை மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் வசிப்பவர் சங்கரபாண்டியன். சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் உதவி ஆய்வாளராக இருக்கிறார். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கான மத்திய கூடுதல் சொலிசிட்டர்(வழக்கறிஞர்) ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் இவருக்கு, அரசு சார்பில் '9 எம்எம் பிஸ்டல்' வகையை சேர்ந்த துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.

ஆலந்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி யாற்றிவரும், சங்கரபாண்டியனின் மகள் அபிநயாவும்(25) மந்தைவெளியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தேனி மாவட்டம் வருசநாடு பகுதியை சேர்ந்த ராஜசேகர்(27) என்பவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட ராஜசேகர் கொடுமைப்படுத்துவதாக, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அபிநயா. குடும்பத்தினரின் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து புகாரை வாபஸ் பெற்றார். இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 3 மாதங்களாக மந்தைவெளியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார் அபிநயா.

இந்நிலையில், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்ததைத் தொடர்ந்து, தனது தந்தையிடம் வந்து பேசுமாறு ராஜசேகரிடம் கூறியிருக்கிறார் அபிநயா. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள மசூதி அருகே சங்கரபாண்டியன், ராஜசேகர், அபிநயா ஆகிய 3 பேரும் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது மகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அபிநயாவை தாக்கினார் சங்கரபாண்டியன். தடுக்க முயன்ற மருமகன் ராஜ சேகரை தனது துப்பாக்கியால் 3 முறை சுட்டார். இதில் 2 குண்டுகள் ராஜசேகரின் அடிவயிற்றில் பாய்ந்தன. ஒரு குண்டு அருகே இருந்த மசூதியின் சுவரில்பட்டு விழுந்தது.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அதிர்ச்சியடைந்த அபிநயா, ராஜசேகரை ஆட்டோவில் ஏற்றி அடையார் பாலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆத்திரம் தணியாமல் துப்பாக்கியோடு ஆட்டோவை துரத்திச் சென்ற சங்கரபாண்டியன், எதிரே குழந்தையுடன் கடைக்கு வந்த மீனாட்சி என்ற பெண் மீது மோதினார். இதில் மீனாட்சியின் குழந்தை சாலையில் விழுந்தது. அப்பகுதி பொதுமக்கள் சங்கர பாண்டியனை சுற்றிவளைத்து பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட், சீனிவாசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சங்கர பாண்டியனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர் மீது ஆயுதச்சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை 18 -வது குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

குண்டு காயம் அடைந்த ராஜசேகருக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 குண்டுகளும் அகற்றப்பட்டன. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x