Published : 07 Sep 2020 08:16 PM
Last Updated : 07 Sep 2020 08:16 PM

கரோனா நோய்த்தொற்று அலட்சியம் காட்டும் காப்பீட்டு நிறுவனங்கள்: முதல்வர் தலையிட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு உரிய சிகிச்சைக் கட்டணங்களை, மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி ஆணை பிறப்பிக்க வேண்டும்; மறுக்கும் நிறுவனங்களைத் தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யும் என எச்சரிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக் கட்டணங்களை ஏற்க மறுப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலை தருவதாக இருக்கின்றன.

பணியில் இருப்போர் மட்டுமின்றி - ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கரோனா நோயை விடக் கடுமையான தண்டனையைத் தினமும் அனுபவித்து வரும் அவலம் அதிமுக அரசால் ஏற்பட்டிருப்பதற்கு, கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அரசு சார்ந்த மருத்துவக் காப்பீட்டில், கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக, சிறப்பு நிதி ஒதுக்கி கட்டண வழிகாட்டு முறையைத் தமிழக அரசு 24.06.2020 அன்று (G.O. MS No. 280) ஆணையிட்டதில், பல குளறுபடிகள்.

அந்த ஆணையின்படி கரோனா நோய்த் தொற்று, ஆர்டி பிசிஆர் (“RT PCR”) பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு மட்டும்தான், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்றுக் கொள்கின்றன என்பது கொடுமையாக இருக்கிறது.

மருத்துவ அளவுகோல்களின் படியான தொற்று (Clinical Corona - CT Scan) மற்றும் சந்தேகிக்கக் கூடிய கரோனா தொற்றுநிலை (Suspected Corona infection) ஆகிய மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணங்களை, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பதில்லை என்பது முரண்பாடாக இருக்கிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும், “அதிமுக அரசின் ஊழல்களும்” என்றும்; “அரசின் நடவடிக்கைகளும், குளறுபடிகளான அறிவிப்புகளும்” என்றும் தனித்தனியாகப் புத்தகமே தயாரித்து வெளியிடும் அளவிற்கு, அதிமுக அரசின் தோல்விகள் வரிசையாக அணி வகுத்து நிற்கின்றன.

ஒவ்வொரு துறையிலும் தலைவிரித்தாடும் “கரோனா ஊழல்”, “கரோனா குளறுபடிகள்” போன்றவற்றால், தினந்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கையும், ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிற நேரத்தில், இந்த மருத்துவச் சிகிச்சை குறித்த மருத்துவக் காப்பீட்டுக் குளறுபடிகளையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, முதல்வரோ கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

இதனால், நோய்த் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - குறிப்பாக ஓய்வூதியதாரர்கள், மருத்துவக் கட்டணத்தைத் தாங்களே செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தாங்க முடியாத வேதனைக்குள்ளாகிறார்கள்.

இந்த அரசுக்கும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், திரைமறைவில் ஏதோ ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கட்டணங்கள் மறுக்கப்படுவதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

ஆகவே, கரோனா நோய்த் தொற்று குறித்த மேற்கண்ட மூன்று வகையிலான கரோனா சிகிச்சைகளுக்குமான கட்டணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களே கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்; அப்படி ஏற்றுக் கொள்ள முடியாது என மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களை, தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். தாமதம் இல்லாமல் இதைச் செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x