Published : 07 Sep 2020 03:43 PM
Last Updated : 07 Sep 2020 03:43 PM

புதிய கல்விக்கொள்கை: இருமொழிக் கொள்கையை பின்பற்ற முடிவு; தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு; மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கடிதம்

அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை

தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று (செப். 7) எழுதியுள்ள கடிதம்:

"புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பான கருத்துகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். புதிய கல்விக் கொள்கை - 2020 தொடர்பாக, தமிழக முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பாக பரிந்துரைகளை வழங்க தமிழக உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. அக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, புதிய கல்விக்கொள்கை 2020 தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கிறேன்.

அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

1. புதிய கல்விக்கொள்கை, 2035-ம் ஆண்டுக்குள் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அகில இந்திய உயர்கல்வி புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இதனால் 50 சதவீத இலக்கை 2019-2020 ஆம் கல்வியாண்டிலேயே அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகள், ஆசிரியர் சேர்க்கைகள் மூலம் கல்லூரியின் திறனை மேம்படுத்துதல், ஆய்வகங்களை அமைத்தல் ஆகியவற்றை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதனால் 2035-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 65 சதவீதத்தை அடையும்.

2. தமிழகத்தில் ஆசிரியர் - மாணவர் சேர்க்கை விகிதம் 1:17 ஆக உள்ளது. இதன் தேசிய விகிதம் 1:26 ஆக உள்ளது.

3. பி.எட். படிப்பு, இரு முதன்மை பாடங்களுடன் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பாக மாற்றப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இதன்மூலம் மாணவர்கள் விரைவாக பட்டம் பெற்று, ஆசிரியர் பணியில் சேர வழிவகுப்பதால் இது வரவேற்கத்தகுந்த அம்சமாகும்.

4. தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத்தேர்வு

இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களை ஊக்கம் இழக்கச் செய்துவிடும். இதனை தமிழக அரசு ஊக்குவிக்கவில்லை. இது மாணவர்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்.

5. தேசிய கல்விக்கொள்கையின் பிரிவு - 10 கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து பேசுகிறது, மேலும், பிரிவு 10.3, ஒரு கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

தமிழகத்தில் உள்ள 587 கல்லூரிகளில் 53 கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சி அதிகாரம் பெற்றவையாக உள்ளன. மற்ற கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு மேம்பாடு அடைகின்றன. எனவே, தமிழ்நாட்டில் தற்போதைய முறை தொடர அனுமதிக்க வேண்டும்.

6. உயர்கல்வி நிறுவனங்களில் பிராந்திய மொழிகளில் பட்டப் படிப்புகள் வழங்க வேண்டும் என புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. இது தமிழகத்தில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது, இது வெற்றிகரமான நடவடிக்கையாகும். வருங்காலத்திலும் இருமொழிக்கொள்கையை பின்பற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது"

இவ்வாறு அக்கடிதத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x