Published : 22 Sep 2015 04:08 PM
Last Updated : 22 Sep 2015 04:08 PM

மதுரையில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்துக்கு தடை கோரி அதிமுக கவுன்சிலர்கள் தீர்மானம்: சட்ட ரீதியாக சந்திக்க திமுக முடிவு

மதுரையில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இதை சட்டரீதியாக சந்திப்போம் என திமுகவினர் அறிவித்துள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் தொடங்கினார். இவர் வருகிற 26-ம் தேதி மதுரைக்கு வருகிறார்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மேயர் கூறியதாவது:

மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர். இங்கு பல சாலைகள் ஒரு வழிப்பாதையாக உள்ளன. மு.க.ஸ்டாலின் நூறுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் ஒரு வழிப்பாதையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவர்.

மேலும் துணை முதல்வராக இருந்தபோது மதுரை ரயில் நிலையத்தில் ஒருவர் தன்னை தாக்க முயற்சித்ததாகப் புகார் செய்து இசட் பிளஸ் பாதுகாப்பை பெற்றார். இதனால் மதுரையில் ஸ்டாலின் பயண நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காவல் ஆணையர், மதுரை ஆட்சியருக்கு அனுப்புகிறோம் என்றார்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் மதுரை மாநகர் திமுக செயலாளர்கள் கோ.தளபதி, வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்தபோது விடுதலைக்காக மதுரையில் அதிமுகவினர் நடத்திய ஊர்வலத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஸ்டாலின் நடந்துதான் செல்கிறார். மதுரை நகரில் வரும் 26-ம் தேதி ஸ்டாலின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும். சனிக்கிழமை நீதிமன்றமோ, பள்ளிகளோ செயல்படாது. போலீஸில் அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். தடுக்க நினைத்தால் சட்டப்படி சந்திப்போம். அதிமுகவினரிடையே உள்ள கோஷ்டி பூசலால் தங்கள் நிலையை கட்சித் தலைமைக்கு கொண்டுசெல்ல இவ்வாறு செயல்படுகின்றனர் என்றார்.

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 25-ம் தேதி புறநகரில் நடைபெற உள்ள பயணத்துக்காக காவல் துறையிடம் கடந்த 14-ம் தேதி அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதிமுகவினரின் தீர்மானம் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x