Last Updated : 02 Sep, 2020 05:00 PM

 

Published : 02 Sep 2020 05:00 PM
Last Updated : 02 Sep 2020 05:00 PM

மணல் திருட்டில் ஈடுபட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது: விருதுநகர் எஸ்.பி. எச்சரிக்கை

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல், மண் கடத்தினால் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் எச்சரித்துள்ளார்.

ராஜபாளையம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் (கனிமம்) ராஜ்குமார் கீழராஜகுலராமன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதையடுத்து ராஜபாளையம்- ஆலங்குளம் சாலையில் வி.புதூர் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது.

அதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் ஓட்டுநர் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த கணேசன் (42) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். டிராக்டர் உரிமையாளர் செல்வகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் மணல், மண் மற்றும் கனிம வளங்களை திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 379 மற்றும் சுரங்கங்கள், கனிமங்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பட்டு சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 91500 11000 என்ற கைபேசி எண்ணை அழைத்தோ அல்லது வாட்ஸ்-ஆப், குறுஞ்செய்தி மூலமாகவோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் பற்றிய ரகசியம் காக்கப்படும்.

மேலும் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x