Last Updated : 02 Sep, 2020 04:06 PM

 

Published : 02 Sep 2020 04:06 PM
Last Updated : 02 Sep 2020 04:06 PM

தேவையில்லா காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இலங்குளம் ஆர்.சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு இடைநிலை ஆசிரியராக ஏ.பாக்கியா ரெக்ஸிலின் நியமிக்கப்பட்டார்.

இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தை நிராகரித்து வட்டார கல்வி அலுவலர் 23.1.2019-ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தனது பணி நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பாக்கியா ரெக்ஸிலின் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

வட்டார கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவில் பள்ளி நிர்வாகத்தின் கடிதத்தை நிராகரிக்க தேவையற்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கடிதம் அனுப்பும் போது, பள்ளியின் தீத்தடுத்து மற்றும் சுகாதாரச் சான்றிதழ் கேட்பது அபத்தமானது. இதுவரை கேள்விப்படாத ஒன்று.

ஆசிரியர் பணி நியமனத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் மாவட்ட கல்வி அலுவலருக்கு தான் உண்டு. வட்டார கல்வி அலுவலர் பள்ளியின் கடிதத்தை மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய வேண்டும்.

பரிந்துரை அதிகாரம் மட்டுமே உள்ள வட்டார கல்வி அலுவலர் இயந்திரத்தனமாக செயல்பட்டு, தேவையற்ற காரணங்களை கூறி பள்ளியின் கடிதத்தை நிராகரித்துள்ளார்.

வட்டார அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல் முறையல்ல. பலமுறை நடைபெற்றுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை நாடுவதால் நீதிமன்றத்தின் சுமை தேவையில்லாமல் அதிகமாகிறது.

நீதிமன்றம் பலமுறை தெரிவித்தும் மனதை செலுத்தாமல் தேவையற்ற காரணங்களை குறிப்பிட்டு இயந்திரத்தனமாக உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளை ஏற்கக்கூடாது. பொருந்தா காரணங்களை கூறி உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

எனவே நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் 2 வாரத்தில் பணத்தை கரோனா நிவாரணப் பணிக்காக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். வட்டார கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கை மீது மாவட்ட கல்வி அலுவலர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x