Last Updated : 28 Aug, 2020 02:48 PM

 

Published : 28 Aug 2020 02:48 PM
Last Updated : 28 Aug 2020 02:48 PM

14 கண்மாய்கள் ரூ.7 கோடியில் தூர்வாரி சீரமைப்பு: குடிமராமத்துப் பணிகள் அடுத்த மாதம் முடிவடையும்- மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள குலையன்கரிசல் பொட்டைகுளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள குலையன்கரிசல் பொட்டைகுளத்தை இந்திய ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் ரூ.20 லட்சம் செலவில் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் தான் அதிகமான மழை பொழிவு இருக்கும். 70 சதவீத மழை பொழிவு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும். மழை காலத்துக்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாரும் நோக்கத்தில் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை குளங்கள் தூர்வாரபடுகின்றன.

மேலும், பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து மேலும் சில குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குலையன்கரிசல் ஊராட்சி பொதுமக்கள், விவசாயகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் உள்ள பெரிய குளமாகிய பொட்டைகுளத்தை, இந்திய ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் ரூ.20 லட்சம் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகள் செய்யப்படவுள்ளது. இக்குளம் 250 ஏக்கர் பரப்பளவும், சுமார் 1000 ஏக்கர் ஆயக்கட்டு பகுதியும் கொண்டுள்ளது. இப்பணிகள் குலையன்கரிசல் பாசன விவசாயிகள் சங்கத்தின் மூலம் செய்யப்படவுள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள உப்பாத்து ஓடை கரைகளை பலப்படுத்தும் பணி ஸ்பிக் எலக்ட்ரிக்கல் பவர் கார்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் ரூ.28 லட்சம் மதிப்பில் நடைப்பெற்று வருகிறது. அடுத்த கட்டமாக கூடுதலாக சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.86 லட்சம் கேட்கப்பட்டது. உடனடியாக அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் இந்த மாத இறுதியில் முழுமை பெறும்.

இதனால் இப்பகுதிகளில் அதிக மழை பெய்யும் போது அத்திமரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நீர் தேங்கி பாதிப்புகள் ஏற்படாத வகையில் நீர் கடலுக்கு சென்றடையும் வகையில் இப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆண்டில் நமது மாவட்டத்தில் முதல்வரின் குடிமாராமத்து திட்டத்தின் கீழ் 14 பொதுப்பணித்துறை கண்மாய்கள் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆயக்கட்டுகாரர்கள் மூலமாகவும், பொதுப்பணித்துறையின் கண்காணிப்பிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருக்கின்றன. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்றார் ஆட்சியர்.

தொடர்ந்து குலையன்கரிசல் பகுதியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறும் பகுதிக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் பத்தமநாபன், இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவன துணை பொதுமேலாளர் கே.கவுதமன், முதுநிலை கட்டுமான மேலாளர் முருகேசன், கட்டுமான மேலாளர் ரமேஷ்பாபு, குலையன்கரிசல் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபாஷ்செல்வகுமார், கவுரவ தலைவர் வி.ஆர்.பி.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x