Last Updated : 28 Aug, 2020 01:41 PM

 

Published : 28 Aug 2020 01:41 PM
Last Updated : 28 Aug 2020 01:41 PM

ஊழியர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யாத நிறுவனங்களுக்கு சீல்: கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

கோவை

கோவை மாநகரில் ஊழியர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தின் மற்ற பகுதிகளை விட, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நி்ரவாகத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முழுப் பலன் அளிக்கவில்லை.

மாநகரில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல், நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், கிருமி நாசினி தெளித்தல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், ''கோவை மாநகரில் உள்ள அனைத்துத் தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அந்தந்த நிர்வாகத்தினர் கரோனா பரிசோதனையைக் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மேற்கொண்டு, அறிக்கை பெற்று வைத்திருக்க வேண்டும். அந்த அறிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது காட்ட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட இடம் பூட்டி சீல் வைக்கப்படும்'' என மாநகராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகத்தினர், மண்டலம் வாரியாக உதவி ஆணையர்கள் மூலம் அந்தந்த மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் கடந்த சில தினங்களாக அளித்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தனது முகநூல், ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில், ''கோவையில் கரோனா நோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படிப் பரிசோதனை செய்ய முடியாவிட்டால் நூறில் 10 பேர் என்ற விகிதத்திலாவது கரோனா பரிசோதனை செய்து, அரசு விதித்துள்ள அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்'' என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு வியாபாரிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x