Published : 21 Aug 2020 05:42 PM
Last Updated : 21 Aug 2020 05:42 PM

உழைக்கும் தோழர்களை உயர்த்திய பொதுவுடமைக் குரல்: தோழர் ஜீவா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்காகத் தன் வாழ்க்கை முழுவதும் போராடிய பொதுவுடமைவாதி ஜீவானந்தத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்னும் கிராமத்தில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி மகனாகப் பிறந்தார் ஜீவா. தங்கள் கிராம தெய்வமான சொரிமுத்து அய்யனாரின் பெயரையே சொரிமுத்து என மகனுக்குச் சூட்டினர் ஜீவாவின் பெற்றோர். ஆனால் அதையெல்லாம் உதறி, பொதுவுடமைத் தலைவர் ஜீவானந்தமாக வாழ்க்கை ஓட்டத்தில் வந்து நின்றவர் தோழர் ஜீவா.

9-ம் வகுப்புப் படிக்கும்போதே காந்தியையும், கதரையும் மையப்படுத்திக் கவிதை எழுதிய ஜீவா, ஒருகட்டத்தில் காந்தியடிகளால் “நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” எனப் பாராட்டப்பட்டவர். இளமைக் காலத்திலேயே வெள்ளையர்களை எதிர்த்துக் குரல் எழுப்பிய இவர், தந்தை பெரியாரின் பாசறையிலும் வளர்ந்தவர். காலப்போக்கில் கம்யூனிசக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு முழுநேரக் கம்யூனிசவாதியாக மாறிய ஜீவாதான், தமிழக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி.

குமரியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடியதிலும் இவரது பங்களிப்பு பெரியது. காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் காந்தி ஆசிரமத்தைத் தோற்றுவித்தது, உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றது என காலத்தால் மறக்கமுடியாத வரலாறுகளையும் தனதாக்கியவர். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற நூலைத் தமிழாக்கம் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து 10 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் பிறந்தாலும் 1952-ல் சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஊக்கமளிக்காத தொழிற்சங்கங்களும், அவர் கலந்துகொள்ளாத தொழிலாளர் போராட்டங்களும் இல்லை.

‘காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா’ என யதார்த்தக் கவிதை வரிகளின் மூலம் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் நிலையை படம்பிடித்துக் காட்டியவர் ஜீவா. அவரது அந்த கம்பீரக் குரல் ஒலிக்காத போராட்டமே இல்லை என்னும் சூழல் இருந்தது.

ஜீவா குறித்த அன்றைய கால நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நாகர்கோவிலைச் சேர்ந்த பெரியவர் சுந்தரம் (90). “திண்ணைக்கல்வி முறையில்தான் ஜீவா கல்வி படித்தார். அன்னாவி என்பவர் அவருக்குப் பாடம் எடுத்தார். ஜீவாவுக்கு தமிழ்ப்பற்று அதிகம். சொரிமுத்து எனப் பெற்றோர் வைத்த பெயரை தமிழன்பன், ஜீவா, ஜீவானந்தம் என அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். அதைப்பார்த்துவிட்டு அன்னாவி அவரிடம் ‘பெயரை இப்படி அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறாயே... உனக்கு சொத்து விஷயத்தில் பிரச்சினை வராதா?’ எனப் புத்தி சொன்னார். அதற்கு ஜீவானந்தம், ‘குத்துக்கல்லுக்கு சொத்து எதற்கு?’ எனக் கேட்டார். முற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஜீவா, தனது சொந்த ஊரான பூதப்பாண்டியில் பட்டியலின மக்களின் பிரச்சினைகளைக் களையவும் போராடினார்.

காமராஜர் முதல்வராக இருந்த போது சென்னையில் ஜீவானந்தத்தின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அரசுப் பள்ளி விழா ஒன்றுக்கு வந்தார். ஜீவா அப்போது சட்டப்பேரவை உறுப்பினர். ஜீவாவையும் அழைத்துக் கொண்டு போகலாம் என காமராஜர் வீடு தேடி வந்தார். அவரைப் பார்த்ததும் ஜீவா நான் வர கொஞ்சம் தாமதமாகும் நீங்கள் செல்லுங்கள் என சொல்லியிருக்கிறார். காரணம் என்ன தெரியுமா? ஜீவானந்தத்திடம் இருந்தது ஒரே ஒரு வேட்டி, சட்டைதான். அதை துவைத்துக் காய வைத்திருக்கிறார். அது உலர்ந்த பின்புதான் ஜீவாவால் வரமுடியும் எனத் தெரிந்தபோது காமராஜரே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். ஜீவாவின் நேர்மையும், வாழ்க்கையும் இப்படிப் பல ஆச்சரியங்கள் நிறைந்தது” என்கிறார் பெரியவர் சுந்தரம்.

1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ஜீவா மறைந்தார். அவரது நினைவாக நாகர்கோவில் நகரின் மையப் பகுதியினான அண்ணா பேருந்து நிலையம் அருகில் பொதுவுடமை ஜீவா மணிமண்டபம் அமைத்துள்ளது தமிழக அரசு. 1998-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார். இந்த மண்டபத்தில், ஜீவாவின் மார்பளவு சிலையும், அவரது புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மணிமண்டபத்தின் முகப்பில் ஜீவாவின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள், அவரது செயல்பாடுகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ஜீவா ஒரு உணர்ச்சிப் பிளம்பு… உணர்ச்சியே அவரது சிறப்பியல்பு. வாழ்க்கை முழுவதும் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டும், குரல் கொடுத்தும் வந்த ஜீவா இந்த மணி மண்டபத்தில் அமைதி கொள்கிறார் - சிலையாக!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x