Published : 21 Aug 2020 02:05 PM
Last Updated : 21 Aug 2020 02:05 PM

ஆய்வுக்கூட்டத்தில் திமுக எம்.பி.யை அனுமதிக்க மறுப்பு; ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம்; ஸ்டாலின் கண்டனம்

அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்எல்ஏக்களை அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி, மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.21) வெளியிட்ட அறிக்கை:

"அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திமுகவின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்துவரும் அதிமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் தருமபுரியில் நடைபெற்ற கரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், திமுகவின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, 'நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்.பி.யை எப்படி அனுமதிக்க முடியும்' என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல்; பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

மக்களாட்சியின் அடிப்படை மற்றும் நிர்வாகத்தின் ஆரம்ப இலக்கணத்தை, முதல்வராகி மூன்றாண்டுகளைக் கடந்த பின்னரும், புரிந்து கொள்ளும் குறைந்தபட்சத் திறன்கூட இல்லாமல் போய்விட்டதே என்பது மிகுந்த வேதனைக்குரியதும் பரிதாபத்திற்குரியதும் ஆகும்.

இதே போல் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் திமுக எம்.பி. - எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திலோ அல்லது அக்கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பங்கேற்க அனுமதி கேட்கவில்லை; திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோருவது, அரசின் செலவில், அரசு அதிகாரிகளுடன், அதுவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய் மற்றும் கரோனா மரணங்களைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத்தான் அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இது அடிப்படை உரிமை; அதை ஏதோ இவர்களுடைய சொந்த வீட்டில் சொந்தச் செலவில் தனிப்பட்ட முறையில் நடத்தும் நிகழ்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டு மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சத்தைப் புறக்கணிக்கும் கீழ்மை என்பதை முதல்வர் பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் பாதிப்பை, மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், பிறகு யாரிடம் முதல்வர் கேட்க மாவட்டங்களுக்குப் போகிறார்?

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கியம். அவர்கள் ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை, முதல்வர் பழனிசாமி உணர வேண்டும். மக்களாலோ, பெரும்பான்மை உறுப்பினர்களாலோ தேர்ந்தெடுக்கப்படாமல், லாட்டரி அடித்ததைப் போலக் கூவத்தூரில் முதல்வர் ஆக்கப்பட்டதால், மக்களின் அருமை அவருக்கு விளங்கவில்லை போலும்!

மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டால், அவர்கள் எழுப்பிடும் மக்கள் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்ற தாழ்வு மனப்பான்மை போலும்!

மக்கள் பிரதிநிதியாக தங்கள் தொகுதியின் குறைகளைத் தெரிவிக்க அனுமதியளிக்க முடியாது என்றால் இது என்ன வகை ஜனநாயகம்? இது 'எடப்பாடி பிராண்ட்' ஜனநாயகமா?

குறிப்பாகச் சட்டப்பேரவை கூடாத இந்த நேரத்தில், மாவட்டங்களுக்குச் செல்லும் போது நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் நேரடியாக ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். அதை விடுத்து அதிமுக உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் மட்டும் கூட்டி வைத்துக் கொண்டு, கேள்வி கேட்கவே ஆள் இல்லாமல், 'சண்டமாருதம்(!)' செய்து சந்தோஷம் கொள்வது எதற்கும் பயன்படாது.

கொடிய கரோனா நோய் குறித்து, களத்தில் மக்களோடு, அவர்தம் எதிர்பார்ப்புகளோடு, உணர்வுகளோடு ஒன்றி நிற்கும் அவர்களிடம் தகவல்களை, பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்கு முதல்வருக்கு ஏன் இந்தக் கூச்சம்? என்னதான் வெட்கம்?

திமுக எம்.பி., எம்எல்ஏக்களை கூட்டத்தில் பங்கேற்க விட்டால் கரோனாவில் அடித்த கொள்ளைகளும் நோய் மற்றும் மரணக் கணக்கு மறைப்பு, குறைப்பு நாடகங்களும் பொது வெளிக்கு வந்து விடும் என்று நடுக்கமா? இல்லை; ஆய்வுக் கூட்டங்கள் என்ற முறையில், மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து, பொதுத் தேர்தல் வேலைகளையும் சேர்த்துக் கவனித்து, நான் மற்றவர்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, என்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ள அரசுப் பணத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துகிறேன்; அதில் எப்படி உங்களை அழைக்க முடியும் என்கிறாரா முதல்வர்?

ஊரடங்கையும் இ-பாஸ் நடைமுறையையும் நீட்டித்து வருவது உள்ளபடியே கரோனா நோய்த் தடுப்புக்காகவா? அல்லது எதிர்க்கட்சிகளைப் பொதுவெளிக்குச் செல்ல முடியாமல், நடமாட இயலாமல் முடக்கி வைத்து விட்டு மாவட்டம் வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, வழக்கம் போல் அறிவிப்பு நாடகங்களை வெளியிட்டு, தலைகீழாக நின்றாவது தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தேர்தல் கால நடவடிக்கையா? என்ற நியாயமான சந்தேகம், அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது இயல்பே அல்லவா?

திமுக எம்.பி., எம்எல்ஏக்களை அரசு விழாக்களுக்கு அழைப்பதை அமைச்சர்களும், முதல்வருமே கூட தவிர்ப்பது, ஆரோக்கியமான ஆட்சி முறைக்கு அழகல்ல; அருவருப்பானதாகும். அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகளை எங்கே மேடையில் பேசி விடப் போகிறார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே இப்படி திமுக எம்.பி., எம்எல்ஏக்களை அரசு விழாக்களில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கிறது அதிமுக அரசு.

ஏற்கெனவே திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தன்னை அரசு விழாவுக்கு அழைக்கவில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொடுத்த போது, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், 'அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அரசு விழாக்களுக்குக் கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவர்களின் பெயரை அரசு விழாக்களின் அழைப்பிதழில் பிரசுரிக்க வேண்டும்’ என்று அதிமுக அரசுக்கு அறிவுரை செய்தார்.

ஆனால், தமிழக சட்டப்பேரவை சபாநாயகரின் அறிவுரையையே அதிமுக அமைச்சர்களும் கேட்பதில்லை; முதல்வரும் கண்டு கொள்வதில்லை என்பது அராஜகத்தின்பாற்பட்டதாகும்.

அந்த அறிவுரை வெற்று அறிவுரை ஆகி, காற்றோடு கலந்து விட்டது!

ஆகவே, அரசு விழாக்களுக்கும் மாவட்ட அளவில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களுக்கும் திமுக எம்.பி.,க்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதல்வரும் அதிமுக அமைச்சர்களும் உடனடியாகக் கைவிட வேண்டும்; கைவிடாவிட்டால் மக்கள் மேலும் கடுமையாகத் தண்டிப்பார்கள்.

பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், கரோனா காலத்தில் நான் அளித்த பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கேட்காத முதல்வர், இந்த விஷயத்தில், குறைந்தபட்சம் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரின் அறிவுரைக்காவது செவிமடுக்க வேண்டும் என்றும், திமுக எம்.பி., எம்எல்ஏக்களை அரசு விழாக்களுக்கும், ஆய்வுக்கூட்டங்களுக்கும் அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி, மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x