Published : 23 Sep 2015 07:35 AM
Last Updated : 23 Sep 2015 07:35 AM

முன்னாள் மாணவர்கள் அளித்த ரூ.12 லட்சம் நிதி உதவியில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வகுப்பறை புனரமைப்பு

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 1976-ம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றாக இணைந்து ரூ.12 லட்சம் நிதி திரட்டி தாங்கள் படித்த வகுப்பறையை புனரமைத்தனர்.

சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1976-1980 இடைப்பட்ட காலத்தில் 120 மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் படித்தனர். தாங்கள் படித்த கல்லூரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் நினைத்தனர். அதன்படி அந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ரூ.12 லட்சம் நிதியை திரட்டினர். அந்த நிதியின் மூலம் கல்லூரியின் பிசியாலஜி வகுப்பறையை புனரமைத்தனர். வகுப்பறைக்குத் தேவையான நாற்காலிகள், மின் விசிறிகள், புரொஜக்டர் போன்ற வைகளை வாங்கிக் கொடுத்துள்ள னர்.

இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் முன்னாள் மாணவர் டாக்டர் ஜே.லலித்குமார் கூறியதாவது:

நாங்கள் படித்த பிசியாலஜி வகுப்பறை மோசமான நிலையில் இருந்தது. வகுப்பறையை பார்க்கவே மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன செய்வதென்று நண்பர்களுடன் கலந்து பேசினோம். 1976-1980-ம் ஆண்டு படித்த எங்களுக்குள் வாட்ஸ்-அப் குரூப் வைத்து இருக்கிறோம். மோசமான நிலையில் இருந்த வகுப்பறையை புகைப்படங்கள் எடுத்து எங்கள் வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிட்டோம். நாம் படித்த கல்லூரியின் வகுப்பறை மோசமான நிலையில் உள்ளது. இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பதிவையும் போட்டோம். உடனடியாக அனைத்து மாணவர்களும் உதவி செய்ய முன்வந்தனர். அதன்படி அனைத்து மாணவர்களும் கொடுத்த நிதி ரூ.12 லட்சம் சேர்ந் தது. இதுபற்றி மருத்துவமனை டீன் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸிடம் தெரிவித்தோம். அவர் அரசிடம் பேசி வகுப்பறையை புனரமைக்க அனுமதி வாங்கிக் கொடுத்தார். இதையடுத்து முன்னாள் மாணவர்கள் கொடுத்த ரூ.12 லட்சத்தை கொண்டு வகுப்பறையை புனரமைத்தோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x