Last Updated : 16 Aug, 2020 04:13 PM

 

Published : 16 Aug 2020 04:13 PM
Last Updated : 16 Aug 2020 04:13 PM

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டிய புதுச்சேரி ரயில்வே மேம்பால பணி

புதுச்சேரியில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட்டில் அடிக்கடி போக்குவரத்து தடைபட்டு, பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2013-ம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மத்திய போக்குவரத்துத் துறை மூலம் ரூ.34 கோடியில் அரும்பார்த்தபுரத்தில் மேம்பாலம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 17-ல் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கியது.

ரயில்வே கிராசிங் பகுதியில், ரயில்வே துறை சார்பில் ரூ.5 கோடியில் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், இணைப்புப் பாலம் பணி, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினையால் நீண்டது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி, அப்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இணைப்புப் பாலத்துக்கு அடிக்கல் நாட்டியதையடுத்து பணிகள் தொடங்கியது. பணிகளை 9 மாதத்துக்குள் முடித்துப் பயன்பாட்டுக்கு விட திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடையாமல் தொடர்ந்தது.

புதுச்சேரி-விழுப்புரம் சாலை போக்குவரத்து வழிகள் மாற்றப்பட்டு மக்கள் நெடுந்தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, கடந்த 83 மாதங்களாக (அடுத்த மாதம் செப்டம்பர் வந்தால் 7 ஆண்டுகள்) மேம்பால பணியால் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பெரம்பை வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கனரக வானங்கள் கூடப்பாக்கம் சாலை பொறையூர், ஊசுட்டேரி, கல்மேடுபேட் வழியாக மூலகுளம் சாலையை அடைந்து புதுச்சேரிக்கு செல்கிறது.

அரசு தரப்பில் விசாரித்தபோது, "தாமதத்துக்குக் காரணமான நில ஆர்ஜிதம், நீதிமன்ற வழக்கு என அனைத்தும் நிறைவடைந்து தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில் இணைப்புச் சாலைகள் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் முடிவடைய உள்ளன. மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் திறப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x