Published : 16 Aug 2020 03:07 PM
Last Updated : 16 Aug 2020 03:07 PM

கரோனா தடுப்புப் பணியில் 47 மருத்துவர்கள் உயிரிழப்பு; உயிர்த்தியாகத்தை மறைத்துக் கொச்சைப்படுத்தாமல் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்குக; ஸ்டாலின்

கரோனா தடுப்புப் பணியில் 47 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ள நிலையில், அவர்களது உயிர்த்தியாகத்தை மறைத்துக் கொச்சைப்படுத்தாமல் வெளிப்படையாக அறிவித்து அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை இரண்டையும் தமிழக அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.16) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் 32 மருத்துவர்களும், கரோனா நோய் அறிகுறியுடன் வந்த 15 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளார்கள் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இச்சங்கத்தின் தமிழகத் துணைத் தலைவராக இருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜி.கோதண்டராமன் என்ற மருத்துவரே கரோனா நோய்த் தொற்றால், 35 நாட்கள் போராடி பிறகு உயிரிழந்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளது.

'கரோனா நோய்த் தொற்றுக்கு 43 மருத்துவர்கள் தமிழகத்தில் இறந்துள்ளார்கள்' என்று ஏற்கெனவே இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்தபோது, அதை எள்ளி நகையாடியவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 'அது ஆதாரமற்றது; வதந்தி' என்று பத்திரிகையாளர் பேட்டியில், அதுவும் துறையின் செயலாளரை அருகில் வைத்துக் கொண்டு, தன் நெஞ்சறிந்தே அப்பட்டமாகப் பொய் சொன்னவர்.

இப்போது அடுத்து என்ன மாதிரியான பொய் சொல்லப் போகிறார் விஜயபாஸ்கர்?

இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழகக் கிளையே கரோனா மற்றும் அந்த அறிகுறியுடன் வந்து இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 47 என்று கணக்கை வெளியிட்டுள்ள நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரிடம் உள்ள மருத்துவர்கள் இறப்புக் கணக்கு எத்தனை?

ஆகவே, மரணத்தை மறைக்காதீர்கள்; அது கொடுமையிலும் மாபாதகக் கொடுமை; உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்களின் மரணத்தை, பச்சைப் பொய்களின் மூலம் கொச்சைப்படுத்தும் மனிதநேயமற்ற செயலாகும்.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் உடனடியாக வெளிப்படையாக மருத்துவர்கள் மரணம் குறித்த கணக்கை வெளியிட்டு, கரோனா களத்தில் முன்னணி வீரர்களாக, துணிச்சலுடன் நின்று ஓயாது பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்புக் கவச உடைகளை அளித்துக் காப்பாற்ற முன்வாருங்கள். இதுவரை இறந்து போன மருத்துவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிதி, அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை இரண்டையும் தாமதமின்றி வழங்குங்கள்.

அதுவே மக்களைப் பாதுகாக்கும் மகத்தான பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு இந்த அரசு செலுத்துகின்ற நன்றிக்கடனாக இருக்கும்!"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x