Last Updated : 20 Sep, 2015 05:16 PM

 

Published : 20 Sep 2015 05:16 PM
Last Updated : 20 Sep 2015 05:16 PM

திருச்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ஃபேஸ்புக்கில் கருத்துக்கேட்பு



திருச்சி நகரின் வளர்ச்சிக்காக சமூக வலைதளங்களில் ஒரு நிமிடத்தை செலவிட அழைப்பு

திருச்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பாண்டில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் 20 நகரங்களின் பட்டியல் 2016 ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்பாக டிசம்பர் 15-ம் தேதிக்குள் 100 நகரங்களில் இருந்தும் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

மக்களிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அண்மையில், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், மாநகராட்சி மைய அலுவலகம், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம், ரங்கம் கோட்ட அலுவலகங்களில் கருத்துக்கேட்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று மாணவ, மாணவிகளைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை அறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி ( >https://www.facebook.com/tiruchirappallismartcity) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கும், திருச்சி ஸ்மார்ட் சிட்டி ( >https://twitter.com/TrichySmartCity) என்ற பெயரில் ட்விட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர >https://mygov.in/group-issue/smart-city-tiruchirappalli/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கருத்துகளை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ் நிறுவன இணை இயக்குநர் சைமன் செல்வராஜிடம் கேட்டபோது, “சமூக வலைதளங்கள் மூலம் கருத்து கேட்கும் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து, அதற்கேற்ப கருத்துகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மக்கள் முன்னுரிமை அளிக்கலாம்.

இளைஞர்களிடம் இருந்து அதிகளவில் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.

அனைவரிடமும் ஸ்மார்ட் செல்போன் உள்ளதால், நகரின் வளர்ச்சிக்காக ஒரே ஒரு நிமிடம் ஒதுக்கினால் போதும். அதிகபட்ச நபர்கள் பதிவு செய்யும் கருத்துகளுக்கு ஏற்ப திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

வலைதளங்களில் வந்த பரிந்துரைகள்:

* மாநகரை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

* பொது இடங்களில் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும்.

* அரசுப் பேருந்துகளை அதிகளவில் இயக்கி பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்.

* திருச்சி விமான, ரயில் நிலையங்களிலிருந்து நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

* மரங்களை அதிகம் வளர்த்து திருச்சியை தமிழகத்தின் பசுமைத் தலைநகரமாக்க வேண்டும்.

* தொழில் முனைவோருக்கு ஏற்ற வசதிகளை உருவாக்கித் தர வேண்டும்.

* 24 மணி நேர தடையற்ற மின்சாரம், குடிநீர் அளிக்க வேண்டும்.

* சோலார் மின்சாரம் பயன்படுத்தும் கட்டமைப்பை அனைத்து வீடுகளிலும் உருவாக்க வேண்டும்.

* நாய்கள், மாடுகள், பன்றிகள் நடமாட்டத்தை அனைத்து தெருக்களிலும் முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும்.

* காந்தி மார்க்கெட், மெயின்கார்டுகேட் உட்பட நகரிலுள்ள சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கென தனிச் சந்தையை உருவாக்கித் தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x