Published : 27 Jul 2020 07:24 AM
Last Updated : 27 Jul 2020 07:24 AM

மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய செயலாளர் நியமனம்: ஆணையத்தில் தமிழ் கடவுள் முருகன் ஆதிக்கம்

சென்னை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய செயலராக கே.பாலசுப்பிரமணியம் நியமிக்கப் பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் பணியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஆணையராக ஆர்.பழனிசாமி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை சிறப்பாக நடத்தியதில் ஆணையத்தின் செயலராக இருந்த எல்.சுப்பிரமணியனுக்கு முக்கிய பங்கு உண்டு.

தலைமைச் செயலர் உத்தரவு

இந்நிலையில் இவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த கே.பாலசுப்பிரமணியம், தேர்தல் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலர் கே.சண்முகம் சனிக்கிழமை பிறப்பித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம் தொடர்பான செய்தி வெளியான நிலையில், இவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முருகனின் பெயர்கள்

மாநில தேர்தல் ஆணையத்துக்கும் தமிழ்க் கடவுள் முருகனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆணையத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணையர் ஆர்.பழனிசாமி மற்றும் இதற்கு முன்பு செயலர்களாக இருந்த எஸ்.பழனிசாமி, எல்.சுப்பிரமணியன், தற்போது செயலராக நியமிக்கப்பட்டுள்ள கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் அனைவரும் முருகனின் பெயர்களைக் கொண்டவர்களாக உள்ளனர்.

மேலும் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஆர். பழனிசாமியும் ஆணைய செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கே.பாலசுப்பிரமணியமும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x