Published : 22 Jul 2020 11:07 PM
Last Updated : 22 Jul 2020 11:07 PM

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர ஜூலை 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது...

கரோனா தொற்று அதிகரித்த நிலையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் கல்வி பயில, பணி நிமித்தமாகவும் இருந்த லட்சக்கணக்கான தமிழர்கள் சிக்கிக்கொண்டனர். தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கிடந்தவர்கள் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு விமான சேவை தொடங்கிய பின்னர் மத்திய அரசு மூலம் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.

அதிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலேயே அழைத்துவரப்பட்டனர். தமிழகத்தில் விமானம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் சிக்கிய தமிழர்கள் சென்னை திரும்ப முடியவில்லை.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதில் சென்னை விமான நிலையத்திற்கு 41 விமானங்களும், திருச்சிக்கு 11 விமானங்களும், கோயமுத்தூருக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும் இயக்கப்படும்”. என தெரிவித்தார்.

துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வந்த மூன்று விமானங்கள் காலியாக சென்னையில் தரையிறங்கியதாக கடந்த இரு நாட்களுக்கு முன்பாக இந்து நாளேட்டில் வெளியான செய்தி குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்கள், “பயண முகவர்கள் ஒட்டுமொத்தமாக பயணச்சீட்டினை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்கின்றனர். அதனால் மற்றவர்களால் பயணச்சீட்டுகளை வாங்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

பயண முகவர்கள் ஏன் நஷ்டமடையும் வகையில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்கிறார்கள் என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் பி.வில்சன், “நீதிமன்றத்தின் தலையீட்டால்தான் 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் அதிக விமானங்கள் இயக்கப்பட்டு, வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் பயணிகள் மீட்கப்படுகின்றனர்.

அதோடு, கடந்த 4.7.2020 அன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி, 25939 பயணிகளை மீட்க இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 149 விமானங்களில் 58 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இந்தியர்களை மீட்பதற்கான ஏற்கனவே குறிப்பிட்டபடி 149 விமானங்கள் இயக்கப்பட வேண்டும்”. என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் விமான இயக்கம் தொடர்பான விவரங்களை ஜூலை 30-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை-30-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x