Last Updated : 22 Jul, 2020 05:05 PM

 

Published : 22 Jul 2020 05:05 PM
Last Updated : 22 Jul 2020 05:05 PM

கிரண்பேடி ஒப்புதலுக்குப் பிறகே பட்ஜெட் தாக்கல்; சட்டப்பேரவையில் கடிதத்தைக் காட்டிய நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

பட்ஜெட் தாக்கலுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கைப்பட எழுதி ஒப்புதல் தந்த கடிதத்தை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணாமி காட்டினார்.

புதுச்சேரி பட்ஜெட் கடந்த 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் ஆளுநர் கிரண்பேடியின் உரை காலையில் நடப்பதாக இருந்தது. ஆனால், பட்ஜெட் கோப்பு தனக்கு வரவில்லை என்று கிரண்பேடி தெரிவித்து ஆளுநர் உரையாற்ற வரவில்லை.

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் ஊதியம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டு அதற்கு நான் காரணமில்லை என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனால் பட்ஜெட் தொடர்பான பல கேள்விகள் பலரிடம் எழுந்திருந்தன.

இச்சூழலில், புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 22) அதிமுக எம்எல்ஏ அன்பழகன், "புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் செல்லுமா? செல்லாதா என்பதை தெளிவுபடுத்துங்கள்" என்று கேட்டார்.

அப்போது, பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன், ''பட்ஜெட்டை ஏன் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, "பட்ஜெட் விதிமுறைகளைப் பின்பற்றி தாக்கல் செய்யப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஏப்ரலில் ஆளுநருக்கு பட்ஜெட் கோப்பு அனுப்பினோம். திட்டக்குழு பரிந்துரை கோரினார். அது பெறப்பட்டது. மத்திய அரசுக்கு பட்ஜெட் கோப்பு மே 13-ல் அனுப்பப்பட்டது. மே இறுதியில் மத்திய அரசிடமிருந்து விளக்கம் கேட்டனர். இரு நாட்களில் விளக்கம் தரப்பட்டது. ஒப்புதல் ஜூலை 16-ல் கிடைத்தது.

பட்ஜெட் தாக்கலுக்கும், ஆளுநர் உரைக்கு அனுமதி கோரியும் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினோம். ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் தாக்கலுக்கு ஒப்புதல் தந்தார். விதிமுறைக்கு உட்பட்டுதான் பட்ஜெட் தாக்கல் செய்தோம். 4 ஆண்டு காலமாக இதே விதிமுறையைக் கடைப்பிடித்தோம். துறை வாரியாக ஒதுக்கீடு விவரங்களை தற்போது அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்ய ஆளுநர் அனுமதி தந்து அனுப்பிய கடித ஆதாரத்தை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி காட்டினார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: கோப்புப்படம்

அதற்கு அன்பழகன் (அதிமுக), "ஒப்புதல் தந்துவிட்டு ஆளுநர் வராமல் இருந்தால் தவறு. ஆளுநருக்கு முன்பே ஏன் பட்ஜெட்டை அனுப்பவில்லை" என்று கேட்டார்.

அதற்கு லட்சுமிநாராயணன் (காங்), "கடந்த 57 ஆண்டுகளாக இதுவரை பட்ஜெட் தாக்கலாவதற்கு முன்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது இல்லை. இதுவரை எந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதோ அதுவே இம்முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நிதி மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது. மக்கள் பயப்பட வேண்டியதில்லை" என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரைத் திரும்பப் பெற அதிமுக வலியுறுத்துகிறது என்று அக்கட்சி எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்தார். அதை காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, இதைத் தீர்மானமாக நிறைவேற்றலாம் என்றும் தெரிவித்தனர்.

அப்போது அதிமுக எம்எல்ஏ அன்பழகன், புதுச்சேரி அரசையும் முடக்க வேண்டும் என்று சேர்த்து தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்புங்கள் என்றார். இதையடுத்து, தொடர் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் நால்வரும் வெளிநடப்புச் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x