Published : 02 Sep 2015 08:53 AM
Last Updated : 02 Sep 2015 08:53 AM

அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு: பேரவையில் இருந்து 5-வது நாளாக திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலத் தின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டபேரவையில் நேற்று தாமிரபரணி, பவானி, காவிரி ஆறுகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், ‘‘கடந்த திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ‘காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாக’ செயல்பட்டது’’ என குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இருக்கை அருகே வந்து கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் கோஷம் போட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது பேசிய திமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘திமுக ஆட்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ‘காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாக’ செயல்பட்டதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அதை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அந்த வாக்கியத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். அதுபோல மைனாரிட்டி திமுக ஆட்சியில் என அமைச்சர் பேசியதையும் நீக்க வேண்டும்’’ என்றார்.

அதை ஏற்காத பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘அமைச்சர் பேசியதும், அதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் பேசியதும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே, அமைச்சர் பேசியதை நீக்க வேண்டியதில்லை. எனவே, திமுக உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்கு திரும்ப வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனாலும், அமைச்சர் பேசி யதை நீக்கக்கோரி திமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இருக்கை அருகே நின்றுகொண்டு கோஷமிட்டனர். தங்களது கோரிக்கையை பேர வைத் தலைவர் ஏற்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு பேரவை நடைபெற்ற 25, 26, 27, 31 ஆகிய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 5-வது நாளாக நேற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x