Published : 05 Jul 2020 13:30 pm

Updated : 05 Jul 2020 13:30 pm

 

Published : 05 Jul 2020 01:30 PM
Last Updated : 05 Jul 2020 01:30 PM

புதுச்சேரி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு; அரசு தலையிட வலியுறுத்தும் சமூக இயக்கங்கள்

puduchery-mla-office-openen-in-tamil-association-building
புதுவை தமிழ்ச் சங்கக் கட்டிடம்.

புதுச்சேரி

உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே புதுச்சேரி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் அரசு தலையிடக் கோரி சமூக ஜனநாயக இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தொகுதி எம்எல்ஏவாக ஜான்குமார் உள்ளார். இவர் முன்பு நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, காமராஜர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் அத்தொகுதி காலியானது. அதில் போட்டியிட்டு ஜான்குமார் வென்றார். தற்போது நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமார் வசித்தாலும், காமராஜர் தொகுதியில் தற்போது எம்எல்ஏ அலுவலகத்தை தமிழ்ச்சங்க வளாகத்தில் திறந்துள்ளார். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலர் சுகுமாரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் ஸ்ரீதர், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர்செல்வன், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம் ரகுபதி, இலக்கியப் பொழில் மன்றத் தலைவர் பராங்குசம் உட்பட 12 அமைப்பினர் கூட்டாக மனு தந்துள்ளனர்.

அதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

"புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அக்கட்டிடத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது தவறானது.

புதுவைத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் மூத்த வழக்கறிஞர் சி.பி.திருநாவுக்கரசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் மூலம் கட்டப்பட்டது. தமிழ்ச் சங்கத்துக்கு இடம் சொந்தமாக இருந்தாலும், கட்டிடம் அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்குச் (DRDA) சொந்தமானது. இதுகுறித்து அப்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இயக்குநர் இடையே பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் உள்ளது.

இக்கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நூலகம் அமைக்கவே நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் மேற்சொன்ன ஒப்பந்தத்தை மீறி கட்டிடத்தை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதித்து வருகின்றனர். மேலும், இவ்வாறு வசூலாகும் பணத்திற்கும் முறையாகக் கணக்கு வைக்காமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்தத்தில் கூறியபடி ஆண்டுதோறும் கணக்குகளைத் தணிக்கை செய்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அளிப்பதில்லை. பணப் பயன் பெறும் வகையிலும், நூலகம் தவிர வேறு பயன்பாட்டுக்குக் கட்டிடத்தைப் பயன்படுத்தவும் கூடாது என ஒப்பந்தத்தில் கூறியதை அப்பட்டமாக மீறிச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களின் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, கட்டிடத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்து அரசு கையகப்படுத்திடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது (W.P.No. 2071 of 2020).

இந்நிலையில், தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு நிலுவையில் உள்ளபோது, இவ்வாறு கட்டிடத்தை ஒப்பந்தத்தை மீறி வேறு பயன்பாட்டுக்கு விட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

எனவே, புதுச்சேரி அரசு இதில் தலையிட்டு தமிழ்ச் சங்கக் கட்டிடம் உள்ளது உள்ளபடியே (Status Quo) இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்".

இவ்வாறு 12 அமைப்பினர் தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

புதுச்சேரி அரசுஜான்குமார்சட்டப்பேரவை அலுவலகம்தமிழ்ச்சங்க கட்டிடம்முதல்வர் நாராயணசாமிPuduchery governmentJohnkumarMLA officeTamil association buildingCM narayanasamyBlogger special

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author