Published : 04 Jul 2020 21:37 pm

Updated : 04 Jul 2020 21:38 pm

 

Published : 04 Jul 2020 09:37 PM
Last Updated : 04 Jul 2020 09:38 PM

கரோனாவுக்காக மத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே;கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் என்ன?- ஸ்டாலின் கேள்வி

where-is-the-funds-allocated-by-the-central-government-for-corona-what-is-the-equipment-purchased-stalin-s-question

பேரிடர் மேலாண்மையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே நடக்கிறோம் எனக் கூறும் முதலமைச்சர் பழனிசாமி, ஏழை - எளியவர்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் மட்டும் அதைக் கடைப்பிடிக்க மறுப்பது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:


கரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் வாங்க ஒதுக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் கூறிய 6600 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததா இல்லையா? அந்தத் தொகைக்குக் கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்துத் தெளிவான அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது, தொடர்ந்துவரும் 'கரோனா ஊரடங்கு' துயரத்தின் சோகத்தில் மூழ்கியிருக்கும் ஏழை - எளிய அடித்தட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது.

கரோனா நோயினால் வாழ்வாதாரம் இழந்து - பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இன்னும் தங்களது நெருக்கடியிலிருந்து மீளவில்லை; அப்படி மீள்வது எப்போது என்ற கேள்விக்கும் அறிவியல் ரீதியான பதில் எதுவும் இப்போது தெரியவில்லை.

மார்ச் 24-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள நான்கு மாத ஊரடங்கின் காரணமாக, அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கையிலும் புயல் வீசி, ஏராளமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. வேலையிழப்பு, வருமான இழப்பு, இல்லாமை, போதாமை, நோய்த் தொற்று போன்றவற்றால் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகும் பலரும் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசே நவம்பர் மாதம்வரை, ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. “பேரிடர் மேலாண்மையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே நடக்கிறோம்” என்று ஒவ்வொரு பத்திரிகைக் குறிப்பிலும், 'பாஜக அரசின் சரணம்' பாடும் முதலமைச்சர் பழனிசாமியோ, “ஜூலை மாதத்திற்கு மட்டுமே அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவோம்” என்று அறிவித்திருப்பது- பாதிக்கப்பட்டுள்ளோரின் பரிதவிப்பை இந்த அரசு உணர மறுக்கும், மனித நேயமற்ற செயல்!

ஏழை - எளியவர்களுக்கு அரிசி வழங்குவதில் மட்டும் ஏன் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நவம்பர்வரை இலவசமாக வழங்க மறுக்கிறார் முதலமைச்சர்? மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு ஜூலைவரை ரேஷனில் இலவசப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறாரே?

கரோனா நோய் சிகிச்சைக்குத் தேவையான வெண்டிலேட்டர், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மட்டுமே இதுவரை 6600 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதியுதவி வழங்கியிருக்கிறோம்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆனால், 17.6.2020 அன்று பிரதமருடன் காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆலோசனையில் கூட “மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய 3000 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி வேண்டும்” என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி. மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பிற்குப் பிறகு தமிழக நிதித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் “கரோனா பணிக்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ள நிதி 1500 கோடி ரூபாய்தான் இருக்கும்” என்று கூறி- அந்தச் செய்தி ஆங்கிலப் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர், முதல்வர், தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள் ஆகிய மூவரில் யார் சொல்வது சரியான கருத்து? நிதித்துறை அதிகாரிகளின் கருத்து சரியென்றால், மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு தவறு என்று முதல்வர் இதுவரை கூறாமல் மவுனம் காப்பது ஏன்?

கரோனாவிற்கான மருத்துவ உபகரணமோ, தமிழ்நாட்டிற்கு நிதியோ எனக்கு முக்கியமில்லை; பல நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, இன்னும் எஞ்சியிருக்கின்ற நாட்களுக்கு நான் எப்படியாவது முதல்வர் பதவியில் தொடர வேண்டும் என்பதுதான் முக்கியம் என்ற சுத்த சுயநலம்தானே.

ஆகவே, பேரிடர் நிர்வாகத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்படி நடக்கிறோம் என்று கூறும் முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாட்டிலும் வருகின்ற நவம்பர் மாதம்வரை நியாய விலைக் கடைகளில் இலவசமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தற்போது வழங்குவது போலவே வழங்கி, ஏழை - எளியவர்களுக்குச் சிறு அளவிலாவது உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாதம் 5,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் இன்னும் உரிய கவனம் பெறாமலேயே உள்ளது. கொரோனா நோய்த் தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? மத்திய நிதியமைச்சர் ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ள 6600 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததா இல்லையா?

அப்படிக் கிடைத்திருந்தால் அந்தத் தொகைக்குக் கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்துத் தெளிவான அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி நாட்டு மக்களின் பார்வைக்கு உடனடியாக வைத்து, வளர்ந்து வரும் சந்தேகத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!


Where is the funds allocated by the Central GovernmentCoronaWhat is the equipmentPurchased?StalinQuestionகரோனாமத்திய அரசு ரூ.6600 கோடி ஒதுக்கிய நிதி எங்கே?கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் என்ன?ஸ்டாலின்கேள்வி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author