Published : 15 Jun 2020 05:14 PM
Last Updated : 15 Jun 2020 05:14 PM

முழு ஊரடங்கு என்னென்ன நடைமுறைகள்: அனுமதி வழங்கப்படும் சேவைகள் எவை?- அரசின் 20 வழிகாட்டுதல்கள் விவரம்  

முழு ஊரடங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இ-பாஸ் ரத்தில்லை, முகக்கவசம் கட்டாயம், வாகனங்களில் செல்லாமல் அருகிலுள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்வது உள்ளிட்ட 20 வழிகாட்டுதல்களை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 இரவு 12 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு

* பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,

* திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய ப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

* செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

*காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இருப்பினும் கீழ்க்கண்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது:

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சேவைகள்:

1. மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.

2. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

3. மாநில அரசுத் துறைகள் 33 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீதப் பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

4) மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீதப் பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

5) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ((Containment Zones) வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

6) வங்கிகள் 33 சதவீதப் பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்), அது சம்பந்தப்பட்ட வங்கிப் பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

7) பொது விநியோகக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோகத் திட்டத்திற்குத் தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள் மற்றும் அதைச் சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

8) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ((Containment Zones) செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.

9) காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ. தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

10) உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுப் பணியாற்ற வேண்டும்.

11) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

12) அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) தொடர்ந்து செயல்படும்.

13) பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

14) அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்.

15) நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.

16) மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.

17) சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கிப் பணிபுரிய அனுமதிக்கப்படும். இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது.

எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள ((Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ((Industries manufacturing essential commodities) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

18) இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்விதத் தடையும் கிடையாது.

19) சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்குச் செல்ல, தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

20) வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளிநாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x