Published : 15 Jun 2020 01:46 PM
Last Updated : 15 Jun 2020 01:46 PM

கரோனா உயிரிழப்புகளை 2 நாளில் மக்கள் முன் வைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை

தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லையென்றால் நோய்த்தொற்று ஏன் இவ்வளவு அதிகரிக்கிறது என தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதவிர 5 கேள்விகளை முன்வைத்துப் பதிலளிக்க வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

“கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகனையும் கரோனா பலிவாங்கி விட்டது. இந்தப் பேராபத்துச் சூழலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சில கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிப்பது என்னுடைய முக்கியமான கடமை என்று கருதுகிறேன்.

கடந்த இரண்டரை மாதங்களாக - கரோனா நோய்த்தொற்றால் தமிழகம் மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களில் எல்லாம் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நிலைமை சீராகி வருகிறபோது - தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த்தொற்றின் எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு நம்மால் இயல்பு நிலை பற்றி எப்படி யோசிக்க முடியும்?

இறப்பு எண்ணிக்கையும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இந்திய நாடே தமிழ்நாட்டின் நிலைமை பற்றிப் பேசும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இந்தச் சூழலைச் சமாளிக்க சரியான முடிவுகளை எடுக்காமல் தமிழக அரசு திணறுகிறது.

கரோனா நெருக்கடியிலிருந்து தங்களை அரசு மீட்க வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற நேரத்தில் - நோய் குறித்த தகவல்களை மறைக்கும் அரசின் போக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகத்தான் இன்று உங்களை எல்லாம் அழைத்துப் பேசுகிறேன்.

நோயால் இறந்தவர்கள் உள்ளிட்ட கணக்கை மறைப்பதையும், வெளிப்படைத்தன்மை இல்லாததையும் “தவறு” என்று சாதாரணமாகச் சொல்லி இருந்துவிட முடியாது. அரசின் பொறுப்பற்ற தனத்தால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

தற்போதைய நிலவரத்தை சில புள்ளிவிவரங்களின் மூலமாகச் சொல்கிறேன்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று முதன்முதலாக மார்ச் 7-ம் தேதி கண்டறியப்பட்டது. மார்ச் 21-ம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும்வரை இரு வாரங்களில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்கட்ட ஊரடங்கின்போது தினமும் சராசரியாக 40 பேர் என்ற அளவில் 1,204 பேருக்கு தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது.

இரண்டாவது கட்ட ஊரடங்கின்போது, தினமும் சராசரியாக 101 பேர் என்ற அளவில் 2,757 பேர் பாதிக்கப்பட்டார்கள். மூன்றாவது கட்ட ஊரடங்கின்போது (மே 3 முதல் - 17 ஆம் தேதி வரை) தினமும் 586 பேர் என்ற சராசரியில் மொத்தம் 8,201 பேர் பாதிக்கப்பட்டார்கள். நான்காவது கட்ட ஊரடங்கின்போது மே 31 வரையில் சராசரியாக தினமும் 904 பேர் என்ற விகிதத்தில் 22,333 பேர் என்ற அளவில் எண்ணிக்கை அதிகரித்தது.

இன்றைக்கு நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 15-ம் தேதி 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நோய்த்தொற்று இன்று 10 சதவீதமாக உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் பத்துப் பேரைப் பரிசோதித்தால், அதில் ஒருவருக்கு கரோனா என்ற நிலை உருவாகிவிட்டது. நோய்த்தொற்றின் எண்ணிக்கை 11 நாட்களுக்குள் இரண்டு மடங்காகி வருகிறது. நாட்டிலேயே இந்த வேகத்தில் அதிகரிக்கும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு என்பதைத் தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மே 12-ம் தேதி கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 8,718 பேர். ஒருமாதம் கழித்து, தற்போது, ஜூன் 14-ம் தேதி இந்த எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்து 44,661 பேருக்குப் பாதிப்பு என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் குறிப்பாகத் தலைநகர் சென்னையைப் பற்றி தனியாகச் சொல்கிறேன்.

இந்தியாவில் உள்ள பிற எந்த நகரத்தைவிடவும் சென்னையில்தான் நோய்ப்பரவலின் விகிதம் அதிகமாக உள்ளது. மும்பை, டெல்லி போன்ற நகரங்கள் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் தலா 990 மற்றும் 967 என்று சராசரியாக நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலும், சென்னையில் சராசரியாக ஒருநாளைக்கு 1,597 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள கரோனா நோய்த்தொற்றின் மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 10 சதவீதம் என்பது மட்டுமின்றி- தற்போது நோய்த்தொற்று 5.2 சதவீதம் என்கிற விகிதத்தில் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் 435 பேர் கரோனா நோய்த்தொற்றினால் இறந்திருப்பதாகவும், அது 0.7 மரண விகிதம் என்று அரசு வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. இந்த அரசாங்கம் எந்த அளவுக்கு இரக்கமற்றதாக இருக்கிறது என்பது இதன் மூலமாகத் தெரிகிறது.

தமிழகத்தில் மே 31-ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு பதற்றமோ படபடப்போ வந்ததாகத் தெரியவில்லை. படிப்படியாக ஒவ்வொரு நாளும் இந்த அரசாங்கம் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு வந்துள்ளது என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

மார்ச்-7: தமிழகத்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதல் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், தொடக்கத்தில் இருந்தே, வாய்ப்புகள் இருந்தபோதும் அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்தடுத்து நோய்த்தொற்று பரவியும், அரசு தன் செயல்படாத அலட்சியத்தால் இன்றைக்கு நம்மை நோய்ப் பேரிடருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

மார்ச்-17: சட்டப்பேரவையை ஒத்திவைத்து, கரோனா தடுப்புப் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக எழுப்பியபோது, “இது மருத்துவ விவகாரம்” என்றும், வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும் கூறி முதல்வர் எள்ளி நகையாடினார். முதல்வரின் பொறுப்பின்மையால் இன்றைக்குத் தமிழ்நாடு இந்திய நாட்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக மாறிவிட்டது.

மார்ச் -21: மத்திய அரசு சுய ஊரடங்கு அறிவித்த பிறகுதான் அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அதுவரை மத்திய அரசின் பொம்மையாக இருந்து- குழப்பத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் அதிமுக அரசு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

மார்ச்-28: ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைக் கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் பண உதவி செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. அதை அரசு செய்யவில்லை. 2 லட்சம் கோடி ரூபாயில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் மாநில அரசுக்கு மக்களின் பட்டினியைப் போக்கும் இந்த நிதியுதவிக்கு 3,850 கோடி ரூபாய்தான் தேவைப்பட்டிருக்கும். மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம் கூட இல்லாத இந்தப் பண உதவியை அதிமுக அரசு மக்களுக்கு அளிக்க முன்வராததற்கு என்ன காரணம்?

மார்ச்-28: இந்தத் தருணத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு- அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து கரோனா பேரிடரில் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்று கூறி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு இந்த அரசு செவிமடுக்கவில்லை. கொள்ளை நோயின் காலத்தில் பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது. ஆனால் நமது மாநில முதல்வரிடம் பேச முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

ஏப்ரல்-14: முதல்கட்ட ஊரடங்கை வீணடித்தோம். தேசிய அளவில், ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கு 539 பரிசோதனைகள் என்ற கணக்கில் பரிசோதனைகள் செய்யப்பட்ட நேரத்தில், தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு 32 பேரை மட்டுமே பரிசோதனை செய்தோம். ஆகவே முதல் ஊரடங்கு முடியும் போதே- நோய்த்தொற்றில் நாட்டில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலமானது.

இப்பொழுது, நான்காம் கட்ட ஊரடங்கிற்குப் பிறகும்- இந்தியாவின் மொத்த கொரோனா நோய்த்தொற்றில் 10 சதவீதத்தைச் சென்னை கொண்டிருக்கிறது. நோய்த்தொற்று அதிகரிப்பு கிராப் கீழே, சமநிலைக்கு வரும் வாய்ப்பு கூட அருகாமையில் தென்படவில்லை.

ஏப்ரல்-16: தமிழ்நாட்டில் 1000க்கும் கூடுதலான நோய்த்தொற்று இருந்த நேரத்தில்- நோயின் தீவிரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குப் பதிலாக முதல்வர் “ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கரோனா போய் விடும்” என்று அறிவித்து மக்களைத் தவறாக வழிநடத்தினார்.

“கரோனா பணக்காரர்கள் வியாதி” என்றும் “வெளிநாட்டிற்கு” அல்லது “வெளிமாநிலங்களுக்கு” சென்று திரும்பியவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்” என்று கூறி இந்நோய் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவராக இருந்தார். இன்றைக்கு அரசின் தகவலின்படியே 95 சதவீத கரோனோ நோய்த்தொற்று தமிழகத்திற்குள்ளேயே உருவானது, வெளிநாட்டிலிருந்தோ, வெளிமாநிலத்திலிருந்தோ இறக்குமதி செய்யப்படவில்லை என்பதைப் பார்க்கும் போது முதல்வர் சொன்னது ஜோக்கா?

ஏப்ரல்-24: தனக்கு ஏதோ தெரியும் என்பதுபோல் சென்னைக்கும்- நான்கு நகரங்களுக்கும் “ஊரடங்கிற்குள் 4 நாள் ஊரடங்கை” திடீரென அறிவித்தார் முதல்வர். குடிநீர் உட்பட அத்தியாவதியத் தேவைகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களிடையே உண்டான பதற்றத்தில் ஏப்ரல் 25-ம் தேதி கோயம்பேடு மார்கெட் உட்பட பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்தப் பொறுப்பில்லாத ஊரடங்கு முடிவானது தினமும் 50-க்கும் குறைவாக இருந்த கரோனா நோய்ப் பாதிப்பை- ஒருவாரத்திலேயே தினமும் 250-ஆக உயர்த்தி மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றை பன்மடங்கு பெருக்கியது.

ஏப்ரல்-27: எல்லாவற்றுக்கும் மேலாக பரிசோதனைக் கருவிகளின் தரமே கேள்விக்குரியதாக இருந்தது. ஐசிஎம்ஆர் அங்கீகரிக்காத 24 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளின் தரம் பற்றி நாம் கேள்வி எழுப்பியதும், அவற்றைத் திருப்பி அனுப்பினார்கள். இன்றைக்கு இரண்டு மடங்காக, மூன்று மடங்காக பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தும் நோய்த்தொற்றைக் குறைக்க முடியவில்லை.

மே-7: நோய்த்தொற்றின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து கொண்டிருந்தபோது, டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அரசின் முடிவானது மிக வேதனையான முடிவு. தாய்மார்களின் கோரிக்கைகளைக் கூட ஏற்காமல் டாஸ்மாக் கடைகளைத் திறந்தார்கள். சமூக இடைவெளி அங்கு காணாமல் போனது. 24 மணி நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே தலையிட்டுக் கடைகளை மூட உத்தரவிட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர் பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று அரசு அவசரமாக முடிவு எடுத்தது ஏன்?

மே-10: கோயம்பேடு கரோனோ நோய்த்தொற்றின் கேந்திரமாக மாறியது அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக மாறியது. மாநிலம் முழுவதும் தினமும் 1,000 பேர் பாதிக்கப்படக் காரணமாக அமைந்தது. கோயம்பேடு மார்கெட் விவகாரத்தில், அலட்சியமாக நடந்து கொண்டதால், நோய்த்தொற்று அதிகரித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே கோயம்பேட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்பதற்கான படங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளியிட்டு வந்தன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மே-13: நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்த நேரத்தில், “ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவோம்” என்று அறிவித்து “அதற்குள் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துவிடும்” என்று பொய்த் தோற்றத்தை மக்களிடம் அரசு ஏற்படுத்தியது. 31-ம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்த பிறகுதான் “தேர்வை நடத்த முடியாது” என்பதை தமிழக அரசு உணர்ந்தது. இப்படியான குழப்பமான அறிவிப்புகளை எந்த அடிப்படையில் அரசு அறிவித்தது?

ஜூன்-7: சூழல் தொடர்ந்து மோசமாகவே இருக்கும்போது, நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல்- மீண்டும் ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்புத் தேர்வை நடத்துவோம் என்று அரசு அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தாலும், பெற்றோர் - மாணவர்கள் - ஆசிரியர்கள் எதிர்ப்பாலும், உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலாலும், தேர்வை ரத்து செய்தனர். 9 லட்சம் மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு தேர்வை நடத்தும் முடிவை அரசு எப்படி நியாயப்படுத்தும்? இப்படி வரிசையாக தவறுக்குமேல் தவறு செய்தது தமிழக அரசு.

நோய்த்தொற்று குறித்த தகவல்களில் வெளிப்படைத் தன்மையே ஆரம்பத்தில் இருந்து அரசிடம் இல்லை.

ஜூன்-7: கொள்ளை நோய் தொடக்கத்திலிருந்து பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பிறகே- ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பரிசோதனை குறித்து ஒரு நாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஜூன்-8: “இந்தியன் ஜேர்னல் ஆப் மெடிக்கல் ரிசர்ச்”-ல் வெளிவந்துள்ள ஐசிஎம்ஆர் ஆய்வின்படி, தமிழ்நாட்டில் 577 பேர் உள்பட நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் இருக்கும் 52 மாவட்டங்களில் 5911 மிகக் கடுமையான சுவாசத் தொற்றுடன் கூடியவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 102 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்களில் 40 பேர் அதாவது 39.2 சதவீதம் பேருக்கு யார் மூலம் நோய்த்தொற்று வந்தது என்ற தகவலோ, அவர்கள் வெளிநாடு சென்று வந்ததாகவோ தகவல் இல்லை. ஆனாலும் சமூகப் பரவல் இல்லை என்று கூறி- மக்களின் உயிரைப் பணயம் வைத்து தவறான தகவல் மூலம் இந்த அரசு அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது.

ஜூன்-13: மே மாதம் 28-ம் தேதி நிகழ்ந்த மரணம் மூன்று வாரம் கழித்து ஜூன் 7-ம் தேதி அரசின் செய்திக் குறிப்பில் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 24 மே முதல் ஜூன் 7-ம் தேதி வரை நிகழ்ந்த 7 மரணங்கள் நேற்றைய முன்தின செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரணமாக, ஒரு மரணத்தைப் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி 21 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் இதுபோன்ற கரோனா காலத்தில் மரணங்களை வெளியிட ஏன் தாமதம்? மரணங்கள் பற்றிய தகவல்களே இல்லாமல் அரசு எப்படி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கிறது?

சென்னையில் சுகாதார உட்கட்டமைப்பு நொறுங்கிப் போய்விட்டது என்பதைத்தான் இவையெல்லாம் வெளிப்படுத்துகின்றன.

நோய்த் தடுப்பில் முன்வரிசையில் நிற்கும் கள வீரர்களுக்கு எவ்வித ஆதரவையும் இந்த அரசு அளிப்பதில்லை. ஆனால் அதுதான் மிக முக்கியமான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதைப் பார்த்தால்- இந்த நெருக்கடியைக் கையாள காலத்தே இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. தலைமைப் பண்பு இல்லாதவரின் அரசின் தோல்வி என்பதைக்காட்டிலும்- ஒவ்வொரு சென்னைவாசியும் ஆபத்தில் உள்ள சூழலில் நாம் இன்றைக்கு இருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும் மறைத்தே வருகிறது தமிழக அரசு.

பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கடந்த சில தினங்களாக கரோனா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தமிழக அரசு குறைத்துக் காட்டியுள்ளது குறித்த புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளீர்கள்.

இந்தச் செய்திகளின்படி, பொது சுகாதாரத்துறை (பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநரகம்) சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவமனைகளில் 460 பேர் சென்னையில் இறந்துள்ளதாக ஜூன் 9-ம் தேதி வெளியிட்டுள்ளது. ஆனால் மாநில சுகாதாரத் துறை 224 பேர் மட்டுமே இறந்ததாகத் தெரிவித்துள்ளது.

இது ஏதோ தனிப்பட்ட நிறுவனம் ஆய்வு நடத்தி, தகவல்களைச் சரிபார்த்து வெளியிட்ட தகவல்கள் அல்ல. இரண்டு புள்ளிவிவரங்களுமே இருவேறு அரசு நிறுவனங்கள் நேரடியாக வெளியிட்ட வேறுபட்ட எண்ணிக்கையிலான தகவல்தான். இதுபோன்ற தகவல்களை முறையான சரிபார்ப்பிற்குப் பிறகுதான் அரசு வெளியிடுகிறதா?

சென்னையில் கரோனா வைரஸால் இறந்த 236 பேரின் மரணம்- அதாவது இரு மடங்கிற்கும் அதிகமானவர்களின் மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளதுதான் கவலையளிக்கிறது. கணக்கில் வராத 236 பேரின் மரணங்கள் என்பது ஏதோ புள்ளிவிவரம் மட்டுமல்ல. யாரோ ஒருவருக்கு மகனாகவோ, மகளாகவோ, அன்பிற்கும் பிரியத்திற்கும் உரியவர்களாகவோ, குடும்ப உறுப்பினர்களாகவோ இருந்து உயிரை இழந்தவர்கள்.

இறப்பில் கூட இந்த 236 பேரின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் மூலம் மறைக்கப்படும் இந்த மரணங்கள் குறித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அடையும் துயரங்களை இந்த அரசு புரிந்துகொள்ளுமா?

ஒருபடி மேலே போய் அப்பொழுது சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்தவர் கணக்கெடுப்பில் “இது ஒரு நடைமுறைப் பிரச்சினை. அவ்வளவுதான்” என்றார். ஊரடங்கு அறிவித்து 85 நாட்கள் ஆகியும் மரணத்தை முறைப்படி கணக்கெடுக்கும் ஒரு நடைமுறை ஏன் உருவாக்கப்படவில்லை? 236 பேரின் உயிரிழப்பை மறைப்பதை “ரிப்போர்ட்” செய்வதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல் என்று சொல்லி ஒதுக்கிவிடச் சொல்கிறார்களா?

இதனைத் தொடர்ந்து முதல்வர், “இறப்புத் தகவலை மறைக்க முடியாது. பத்திரிகைகள் உட்பட எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்கிறார். ஊடகங்கள் கவனிக்கவில்லை என்றால் இறப்புகளின் எண்ணிக்கையை மறைக்கலாம் என்கிறாரா முதல்வர்?

இந்த எண்ணிக்கையை மறைத்தது குறித்த அரசின் விளக்கங்களில்- ஒரு பேரிடரை எப்படிப் பொறுப்பற்று மோசமாக அரசு நிர்வகிக்கிறது என்பதும், இறப்பு எண்ணிக்கையை மறைப்பதில் அரசுக்கு உள்ள உள்நோக்கமும் தெரிகிறது.

தகவல்களை மறைப்பதற்கு அரசு உடந்தை: இறப்பு குறித்தான தகவல்களானது மருத்துவமனைகள், சென்னை மாநகராட்சி, மக்கள் நல்வாழ்வுத் துறை, இடுகாடுகள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. பலருக்கும் இதுகுறித்துத் தெரியும்.

அரசு, இதனை அதிகாரிகள் மட்டத்தில் உள்ள பிரச்சினை என்று கூற முயலலாம். ஆனால் இது உண்மையை மறைக்கச் செய்யப்பட்ட வேலை. அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் பங்களிப்பின்றி இவ்வளவு பெரிய அளவில் இறப்பு எண்ணிக்கையை மறைக்க முடியாது. இறப்பு பற்றி விசாரிக்க கமிட்டி அமைத்தது மட்டுமே அரசு கொண்டு வந்த ஒரே தீர்வா?

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரின் பரிந்துரையின் பேரில், அரசு ஆணை எண் 196-ன் கீழ் கடந்த 20.4.2020 அன்று அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் பெறப்பட்ட இறப்பு குறித்தான அறிக்கைகளைத் “தணிக்கை செய்வதற்கு” “ஒரு கமிட்டி” அமைத்தார்கள்.

இப்போது மீண்டும் “ஒரு இறப்பு எண்ணிக்கை சரிபார்ப்பு” கமிட்டியை பழைய கமிட்டி உறுப்பினர்களை வைத்து - பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரின் தலைமையில் நியமித்துள்ளார்கள்.

முதல் கமிட்டி ஒரு முறையாவது கூடியதா? அது தொடர்பான தகவல்கள், அறிக்கைகள் ஏன் இதுவரையிலும் பொது வெளியில் இல்லை? அந்தக் கமிட்டி தோல்வியடைந்து விட்டதால் இரண்டாவது கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா? ஒரு நெருக்கடியை தவறுதலாகக் கையாண்டு விட்டு- அதை கமிட்டி மேல் கமிட்டி நியமித்து எப்படி சரிசெய்ய முடியும்? இப்படிப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அரசிடம் பதில்கள் இல்லை.

தினமும் மாலையில் “கரோனா நோய்” குறித்த செய்திக் குறிப்பு வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஏராளமான குளறுபடிகள் செய்து வருகிறார்கள். ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ‘ரிப்போர்ட்டிங் பார்மேட்’ தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதன்முதலாக 16 வகையிலான தகவல்களுடன் தினசரி செய்திக்குறிப்பு வெளியிட்டார்கள். இன்றைக்கு 9 வகை தகவலுடன்- முக்கியத் தகவல்களை மறைத்து செய்திக் குறிப்பு வெளியிடுகிறார்கள்.

* ஏப்ரல் 24-ம் தேதியிலிருந்து “தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான படுக்கைகள்” “வென்டிலேட்டர்கள்” பற்றி செய்திக் குறிப்பில் எதுவும் இடம்பெறுவதில்லை.

* கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்த தகவல் மே 9-ம் தேதிக்குப் பிறகு வெளியாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் கோயம்பேடு தொடர்பான தொற்று விவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டன.

* நோய் யார் மூலம் தொற்றியது- அல்லது புதிதாக நோய் வந்ததா என்பது குறித்த தகவல் ஏதும் ஜூன் 1-ம் தேதியிலிருந்து இல்லை.

* தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளில் எவ்வளவு படுக்கைகள் நிரப்பப்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் ஜூன் 3-ம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டன. அதாவது உண்மை நிலையை மறைப்பதற்காகத்தான் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள்.

இப்படி இந்த அரசின் கரோனா குளறுபடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். கரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்திலிருந்தே, இது அரசியலுக்கான நேரமில்லை; மக்களின் நலனே மிக முக்கியம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து திமுக பல்வேறு ஆலோசனைகளைச் சொல்லி வருகிறது.

திமுக ஆக்கபூர்வமான முழு ஆதரவினை வழங்கியும், அதிமுக அரசு முதலில் இருந்தே தொடர்ந்து நிராகரித்து வந்தது. ஆனாலும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டிய கடமையில்- திமுக கரோனா பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. அதேநேரத்தில் அதிமுக அரசு கரோனா குளறுபடிகளைச் செய்து- அனைத்து வகையிலும் தோல்வியடைந்து நிற்கிறது.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்துவைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல், நிலைமை முற்றிய பிறகு அதனைப் பின்பற்றுகிறது தமிழக அரசு. பத்தாம் வகுப்புத் தேர்வை ஒத்திவையுங்கள் என்றேன். பிடிவாதமாக மறுத்த தமிழக அரசு பின்னர் ஒத்திவைத்து, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது.

நடமாடும் மருத்துவமனை அமையுங்கள் என்றேன். இப்போதுதான் செய்கிறார்கள். அனைவருக்கும் முகக்கவசம் கொடுக்கச் சொன்னோம். அனைவருக்கும் இது தேவையில்லை என்று அமைச்சர் பதில் சொன்னார். இன்று அனைவருக்கும் கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உண்மைகளை மறைத்து - வெளிப்படைத்தன்மை ஏதும் கடைப்பிடிக்காமல் இன்றைக்கு மக்களின் உயிருக்கு ஆபத்தை அதிமுக அரசு ஏற்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. ஓர் அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு மாறாக- அதிமுக அரசு அலட்சியமாக ஆணவமாக மட்டுமே செயல்பட்டுள்ளது.

ஓர் அரசு முக்கிய முடிவுகள் எடுக்கவும்- அதற்கான திட்டமிடலுக்கும் “உண்மைத் தகவல்கள்” மிக முக்கியம். அதைவிட முக்கியமாக, இத்தகைய பேரிடர் காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முடிவுகளை எடுக்கவும் துல்லியமான தரவுகள் மிக அவசியம்.

பேரிடரைக் கையாள வேண்டிய அரசின் பொறுப்பற்ற தன்மையினால் இன்றைக்கு மக்கள் தங்களின் உயிருக்குப் பேராபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் இறப்பைத் தெரிவிப்பதில் நடைபெற்றுள்ள இந்தத் தவறின் தீவிரத்தை ஏதோ ஓர் அதிகாரியின் தலையில் பழி போட்டுத் தப்பிக்க முடியாது. அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில்- சில முக்கிய கேள்விகளை முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில் மக்களுக்கும் தெரிந்தாக வேண்டும்.

1. கரோனா நோய்த் தடுப்பில் அரசு சிறப்பாகப் பணியாற்றுகிறது என்றும் சமூகப் பரவல் இல்லை என்றும் சொல்வது உண்மையென்றால், ஏன் கரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப் படிகள் போல் அதிகரித்து வருகிறது?

2. கோவிட்-19-ஐ அறவே ஒழிக்கிறோம் என்ற பெயரில் பொய்ப் பேட்டிகளை நிறுத்தி விட்டு- மேல் நோக்கி உயர்ந்து கொண்டே போகும் கரோனா நோய்த்தொற்று வரைபடத்தைத் தட்டையாக்குவதற்கு குறிப்பாக சென்னையில், அப்படிச் செய்வதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?

3. ஊரடங்கு காலத்தில் கமிட்டி மேல் கமிட்டி நியமித்துள்ளீர்கள். ஆனால் இதுவரையிலும் எந்தக் கமிட்டியின் அறிக்கையும் பொதுவெளியில் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறோம் என்று மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?

4. இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், சம்பந்தப்பட்டவர்கள் ஆகியோருடன் கலந்துபேச ஏன் அரசு தொடக்கத்தில் இருந்து மறுத்து வருகிறது?

5. பேட்டிகள், பெயரளவு அறிவிப்புகளை நிறுத்திவிட்டு கரோனா பேரிடரின் விளைவாக, நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மாற்றி அமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் எப்போது அரசு ஆர்வம் காட்டப் போகிறது?

இந்தக் கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள். மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளைத்தான் நான் கேட்கிறேன். இது அரசியல் கேள்விகள் அல்ல. அரசியலுக்கான கேள்விகளும் அல்ல. மக்களின் உயிர் சம்பந்தமான கேள்விகள். மக்களின் வாழ்க்கை தொடர்புடைய கேள்விகள். இதற்கு நேர்மையான பதிலை தமிழக அரசு தரவேண்டும்.

உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மக்களைக் காக்கும் பொறுப்பு அரசின் கையில் தான் இருக்கிறது என்பதை ஊடகங்களின் வாயிலாக அரசுக்கு நினைவூட்டவே உரையாற்றினேன்.

இறுதியாக, நான் அரசுக்கு சொல்ல விரும்புவது;

இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும், குழப்பங்களுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி, அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் - நவம்பரில் கரோனா பாதிப்பு உச்சி முகட்டை எட்டும் என்று ஐசிஎம்ஆர் கொடுத்துள்ள எச்சரிக்கையை, தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களை அக்கறையுடன் கவனிக்க வேண்டும். முன்கள வீரர்களுக்கு, தக்க ஊக்குவிப்பும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். கரோனாவில் உயிர் இழந்த ஏழை எளியோர் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தப் பேரிடர் காலத்தில், அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு இடையே நடக்கும், ‘குழு மனப்பான்மை‘ அடிப்படையிலான, தன் முனைப்புச் சண்டை (Ego War) முடிவுக்கு வர வேண்டும்.

அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பதவிப் போட்டி, தவிர்க்கப்பட வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்குச் சிறப்புத் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அதோடு, கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை, எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, கூட்டல் கழித்தல் இல்லாமல், அப்படியே அடுத்த இரண்டு நாட்களுக்குள், மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால், திமுக நீதிமன்றத்தை நாடும் என எச்சரிக்க விரும்புகிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x