Published : 22 May 2020 04:02 PM
Last Updated : 22 May 2020 04:02 PM

கரோனா பரவலைத் தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசம்: முன்னாள் ராணுவ அதிகாரி உருவாக்கி சாதனை

எலெக்ட்ரானிக் முகக்கவசம்

உதகை

கரோனா பரவலைத் தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை, முன்னாள் ராணுவ அதிகாரி உருவாக்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் வசித்து வருபவர் கர்னல் ராமகிருஷ்ணன். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனகலதாவும் இவர் பணியாற்றும் அதே தொழில்நுட்பப் பிரிவில் பேராசிரியையாக உள்ளார்.

கனடாவில் நிலவும் கடுமையான உறைபனிக் காலத்தைக் கழிக்க முடியாமல் இருவரும் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்துப் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளதால் பனிக்காலம் முடிந்தும் அவர்களால் கனடா திரும்ப முடியவில்லை.

முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், இந்தத் தம்பதியர் தாங்கள் கற்றுத் தேர்ந்த எலெக்ட்ரானிக் துறை மூலம் கரோனாவுக்கு எதிராக எப்படிப் பயன்படுத்துவது என சிந்தித்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து கரோனா பரவலைத் தடுக்க எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர்.

காற்றில் பரவும் வைரஸைப் பொசுக்கி 100 சதவிகிதப் பாதுகாப்பான காற்றை வடிகட்டும் எலெக்ட்ரானிக் முகக்கவசத்தை வடிவமைத்துள்ளனர்.

இது ரெஸ்பிரேட்டருடன் கூடிய எலெக்ட்ரானிக் பில்டர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசம் விமானப்படை, ரயில்வே போன்ற துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரானிக் முகக்கவசம் குறித்து விளக்கும் முன்னாள் ராணுவ வீரர் ராமகிருஷ்ணன்

இதுகுறித்து கர்னல் ராமகிருஷ்ணன் கூறும்போது, "இந்த முகக்கவசத்தை அணிபவர்களுக்கு ஆக்சிஜன் தடையின்றிக் கிடைக்கும்.

அதேசமயம் கரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் அழிக்கப்படும் வகையில் இந்த எலெக்ட்ரானிக் முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகக்கவசம் மிகவும் பாதுகாப்பானது. லித்தியம் பேட்டரி மூலம் 'ஹை வோல்டேஜ்' திறனுடன் செயல்பட்டு சுவாசக் காற்றில் பரவ இருக்கும் நுண்ணுயிரையும் பொசுக்கும் தன்மை கொண்டது. இந்த முகக்கவசம் தயாரிக்க 4,000 ரூபாய் வரை செலவாகும். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் பயன்படுத்தலாம். அதிக அளவில் உருவாக்கினால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அருகில் இருந்தாலும், எலெக்ட்ரானிக் முகக்கவசத்தைப் பயன்படுத்தும்போது தொற்று வராமல் தடுக்க முடியும். மேலும் இதனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x