Last Updated : 15 May, 2020 01:44 PM

 

Published : 15 May 2020 01:44 PM
Last Updated : 15 May 2020 01:44 PM

புதுச்சேரியில் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா: 3 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட தனியார் டயர் நிறுவன ஊழியரின் குழந்தை, மனைவி உட்பட 3 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

புதுச்சேரி கிராமப் பகுதியைச் சேர்ந்த இருவர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் என மூவருக்கும், ஜிப்மரில் தமிழகப் பகுதிகளான பண்ருட்டியைச் சேர்ந்த மூவருக்கும், விழுப்புரத்தைச் சேர்ந்த இருவருக்கும் என ஐந்து பேருக்கும் சிகிச்சை தரப்பட்டு வந்தது.

இந்நிலையில், நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்த அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்தோரைக் கண்டறிந்து பரிசோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போதைய சூழல் தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்த அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை சார்ந்தோரைப் பரிசோதித்தோம். தற்போது அவரின் மனைவி மற்றும் 9 வயது மகளுக்கும், நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது நண்பர் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது டயர் நிறுவனப் பேருந்தில் பணிக்குச் சென்றபோது உடனிருந்தோர், டயர் நிறுவனத்தில் பணிபுரிந்தோர், வெளியில் சென்ற இடங்களில் இருந்தோர் என 50 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்ளாததால் பலரும் சிகிச்சையில் உள்ளனர்.

நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x