Published : 12 May 2020 07:24 AM
Last Updated : 12 May 2020 07:24 AM

இருநபர் குடும்ப அட்டைக்கு அரிசி குறைப்பு என புகார்; நிர்ணயிக்கப்பட்ட அளவு வழங்கப்படும்: உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உறுதி

ஒருநபர், இருநபர் கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த அரிசியின் அளவு குறைவாக வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவு வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஏப்ரல் மாதம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, நிவாரணம் மே, ஜூன் மாதங்களுக்கு வழங்கப் படாவிட்டாலும், பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் இந்த அரிசியை முன்னுரிமை, முன்னுரிமை அற்ற என அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

குறிப்பாக, ஏப்ரல் மாதத்துக் கான அரிசியை மே, ஜூன் மாதங்களில் சேர்த்துப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக் கப்பட்டது. இதன்படி, ஒரு யூனிட் குடும்ப அட்டைக்கு மாநில அரசின் 12 கிலோ, மத்திய அரசின் 5 கிலோ என 17 கிலோவும், 2 யூனிட் என்றால் மாநில அரசின் 16 கிலோ, மத்திய அரசின் 10 கிலோ என 26 கிலோவும் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒரு நபர் அட்டைக்கு 17 கிலோவுக்கு பதில் 12 கிலோவும், ஒன்றரை யூனிட் என்றால், 24 கிலோவுக்கு பதில் 20 கிலோவும், 2 யூனிட் என்றால் 26 கிலோவுக்கு பதில் 20 கிலோவும் என குறைத்தே வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நியாய விலைக்கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ‘‘துறையில் இருந்து அளிக்கப்படும் ஒதுக்கீட்டின்படியே வழங்கி வருகிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக உணவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரிசி குறைக்கப்படவில்லை. விற்பனை முனைய இயந்திரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்படும் அரிசியின் அளவு பிரித்து தரப்பட்டிருக்கும். அதை தேர்வு செய்து அரிசியை வழங்க வேண்டும். சில இடங்களில் இதுபோன்ற புகார்கள் எழுந்த நிலையில் அவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களிடம் தெரிவித்து விட்டோம்’’ என்றனர்.

குழப்பம் உருவானது ஏன்?

இதுதொடர்பாக மன்னார்குடி யில் நேற்று அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘அரிசியின் அளவு குறைக்கப்பட்டதாக கூறப்படு வது தவறானது. ஒரு யூனிட் அட்டைக்கு 12 கிலோவும், ஒன்றரை யூனிட், 2 யூனிட்டுக்கு 20 கிலோவும் வழங்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது’’ என்றார்.

அரசாணையில் உள்ளபடி வழங்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ள நிலையில், அரிசி ஒதுக்கீடு தொடர் பாக கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை யில், ஒரு யூனிட் அட்டைக்கு திருத்தப்பட்ட அளவின்படி, மாநில அரசு சார்பில் 12 கிலோவுக்கு பதில் 7 கிலோ, மத்திய அரசின் 5 கிலோ சேர்த்து வழக்கமான 12 கிலோ மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2 யூனிட்டுக்கு வழக்கமான 16 கிலோவுக்கு பதில் 10 கிலோவும், மத்திய அரசின் 10 கிலோவும் சேர்த்து 20 கிலோ வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஏற் கெனவே வழங்கப்பட்ட அளவை குறைத்ததற்கான காரணம் தெளிவாக இல்லாததால் குழப்பம் உருவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x