Published : 09 May 2020 09:16 PM
Last Updated : 09 May 2020 09:16 PM

மீண்டும் மதுக்கடைகளைத் திறந்து கரோனா அதிகரித்தால் முதல்வரே பொறுப்பு: திருமாவளவன் எச்சரிக்கை

மதுக் கடைகளைத் திறப்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என உச்சநீதிமன்ற மனுவில் கூறியிருக்கும் தமிழக அரசு, மாநில அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசால் பறிக்கப்படும்போது ஏன் வாய் திறக்கவில்லை? ஜிஎஸ்டி வரி பாக்கி 12 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என ஏன் வழக்கு தொடுக்கவில்லை? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சென்னை உயர்நீதிமன்றம் மதுக் கடைகளை மே 17-ம் தேதிவரை மூடுமாறு நேற்று உத்தரவிட்டதால் தமிழக மக்கள் சற்றே ஆறுதலடைந்தனர். இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து இன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கொரோனாவைப் பரப்புவதற்கு அதிமுக அரசு காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது கரோனா அதிகமானால் அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிப்போடப் பார்க்கிறார்களோ என சந்தேகம் வலுக்கிறது. உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மதுக் கடைகளைத் திறப்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என உச்சநீதிமன்ற மனுவில் கூறியிருக்கும் தமிழக அரசு, மாநில அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசால் பறிக்கப்படும்போது ஏன் வாய் திறக்கவில்லை? ஜிஎஸ்டி வரி பாக்கி 12 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என ஏன் வழக்கு தொடுக்கவில்லை?

மதுக்கடைகளில் ஆதார் அட்டையைக் காட்டுவது மக்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள ' ஆரோக்கிய சேது' என்ற செயலி தனிமனித விவரங்களைத் திருடுவதற்கு வழிவகுக்கிறது என வல்லுனர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். மக்களின் அந்தரங்க உரிமைமேல் உண்மையாகவே அக்கறையிருந்தால் அந்த செயலியைப் பயன்படுத்தவேண்டாம் என அதிமுக அரசு ஏன் கூறவில்லை?

தமிழக அரசு கொடுத்த உறுதிமொழிகளை நம்பித்தான் உயர்நீதிமன்றம் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்தது. அந்த உறுதிமொழிகளைக் காப்பாற்றவில்லை என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டித்தான் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பது தமிழக அரசு மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

மீண்டும் தமிழக அரசு மதுக்கடைகளைத் திறந்தால் அதன்மூலம் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பது உறுதி. அதற்கு முதல்வரே முழுப் பொறுப்பேற்கவேண்டும் என சுட்டிக் காட்டுகிறோம்”.
இவ்வாறு திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x