Published : 08 Aug 2015 08:12 AM
Last Updated : 08 Aug 2015 08:12 AM

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கு எழுத்து தேர்வு மதிப்பெண்ணை சேர்க்க வேண்டும்: பழைய நடைமுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவி யாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப் பெண்ணை கணக்கில்கொள்ளாமல் பணி நியமனம் செய்யும் நடைமுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,385 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக் கல்வித் துறை கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதில், எழுத்துத் தேர்வு மதிப்பெண், பணி நியமனத்துக்கு கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை போரூரைச் சேர்ந்த எம்.சந்திரமூர்த்தி உட்பட 10 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் நீதிபதி டி.ஹரி பரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

நேர்முகத் தேர்வு நடத்தாமல், எழுத்துத் தேர்வு அடிப்படையில் மட்டும் சில பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4, குரூப்-2-வில் உதவியாளர், நேர்முக எழுத்தர் போன்ற பணியிடங் களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தி பணி நியமனம் செய்கிறது.

இத்தேர்வு விடைத்தாள் கணினி மூலம் மதிப்பீடு செய்யப்படுவதால் இத்தேர்வு நியாயமாகவும், வெளிப்படையாகவும் உள்ளது. அதனால் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் போன்ற கீழ்நிலைப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி நேரம், சக்தி போன்றவற்றை அரசு செலவிட தேவையில்லை. குரூப்-4, குரூப்-2 போல பணி நியமனம் செய்தால் அரசுக்கு செலவும் குறையும். பொதுமக்களும், இத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுகிறது என்று நம்புவார்கள்.

எனவே, எழுத்துத் தேர்வு, வேலைவாய்ப்பக பதிவுமூப்பு, கூடுதல் கல்வித் தகுதி, பணி முன் அனுபவம் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் கொடுத்து (வெயிட்டேஜ்) தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இப்படி வெளிப்படையாக தேர்வு நடத்தினால் யாரும் கையை நீட்டி கேள்வி கேட்க முடியாது.

இந்த நிலையில், அரசுப் பணிக்காக நடத்தப்படும் தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருத்தல் அவசியம். எனவே, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தின்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணைக் கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

அப்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணான 150-வுடன், வேலைவாய்ப்பக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண், கூடுதல் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், பணி முன் அனுபவத்துக்கு 2 மதிப்பெண் என மொத்தம் 167 மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். அல்லது நேர்முகத் தேர்வுக்கு 8 மதிப்பெண்களைச் சேர்த்து மொத்தம் 175 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

இப்போது மாவட்ட அளவில் ஆய் வக உதவியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யலாம். எதிர்காலத்தில் மாநில அளவில்தான் இத்தேர்வு நடத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கண்டிப்பாக கருத் தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கில் கொள்ளாத தேர்வு நடை முறைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி டி.ஹரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x