Published : 04 May 2020 06:39 PM
Last Updated : 04 May 2020 06:39 PM

ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் முதல்நிலைத் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூபிஎஸ்சி அறிவித்துள்ளது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு மே மாதம் நடக்கும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை.

இந்நிலையில் கரோனோ தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூபிஎஸ்சி) சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்றது.

அனைத்து நேர்முகத் தேர்வுகள், தேர்வுகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் தேர்வர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவேண்டியதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்களை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2019 சிவில் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள் பற்றி, ஊரடங்கின் இரண்டாவது கட்டம் முடிவடைந்த பின்னர், இந்த ஆண்டின் மே மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் முடிவெடுப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்கட்டம் -prelims) ,பொறியியல் சேவைகள் (prelims-முதன்மை), புவியியலாளர் சேவைகள் ( prelims-முதன்மை) தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. பின்னர் நிலவும் சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் இந்தத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படும் பட்சத்தில், அதுபற்றிய அறிவிப்பு மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும், பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையிலும், கரோனா தொற்று பாதிப்பு பல மாநிலங்களில் உச்சத்தைத் தொடுவதாலும் தற்போதைய நிலையில் மீண்டும் முதல் நிலைத்தேர்வை ஒத்திவைப்பதாக யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்த யூபிஎஸ்சி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

''தேர்வாணையத்தின் சிறப்புக்கூட்டம் இன்று (மே 4) நடைபெற்றது. இதில் நாடெங்கும் கோவிட்-19 நிலையைக் கருத்தில் கொண்டு யூபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வை தற்போது நடத்துவது சாத்தியமில்லை என முடிவெடுத்துள்ளது.

சிவில் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (prelims) மே 31 அன்று நடப்பதாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎஃப்எஸ் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு யூபிஎஸ்சி ஆய்வு செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவிக்கும்.

இவ்வாறு அறிவிக்கப்படும் தேதி 30 நாட்கள் இடைவெளி இருக்குமாறு தேர்வுத் தேதிகள் இருக்கும் வகையில் அறிவிக்கப்படும்.

தேர்வுத்துறை ஏற்கெனவே கீழ்கண்ட தேர்வுகள், நேர்முகத்தேர்வையும் ஒத்தி வைத்துள்ளது:

1. 2019-ம் ஆண்டுக்கான சிவில் தேர்வுக்கான நேர்முகத்தேர்வு.

2. 2020-ம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதாரம், இந்தியப் புள்ளியியல் தேர்வு.

3. 2020-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான தேர்வு.

4. மத்திய ஆயுதப்படை போலீஸ் ஃபோர்ஸ் 2020 தேர்வு

5.தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் 2020-ம் ஆண்டு மத்திய கடற்படை அகாடமி தேர்வு''.

இவ்வாறு யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x