Last Updated : 04 May, 2020 01:59 PM

 

Published : 04 May 2020 01:59 PM
Last Updated : 04 May 2020 01:59 PM

எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்!- தமிழக அரசுக்கு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கோரிக்கை

குறைந்த பயணிகளுடன் வாடகை வாகனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று அவர்கள் தரப்பிலிருந்து கூறும்போது, "கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை தமிழகத்தில் மே 17 வரை அதாவது 54 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் வழிச் செலவே எங்கள் வாழ்க்கைச் செலவு என்று வாழ்க்கையை நகர்த்தி வந்த தினக்கூலிகளான கால் டாக்ஸி, ஆட்டோ, மேக்சி கேப், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவேளை உணவிற்கு அடுத்தவர்களின் கையை எதிர்பார்க்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

எனவே, தமிழக அரசு கருணையோடு பரிசீலனை செய்து கீழ்க்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கைகள்
1. வாகனங்களுக்கான கடன் தவணைகளை மேலும் மூன்று மாத காலத்திற்கு (செப்டம்பர் 30 வரை) வசூலிக்கக் கூடாது. அந்தக் காலங்களில் வங்கிக் கணக்குகளில் தவணைகளுக்கான காசோலைகளைச் செலுத்தி செக் பவுன்ஸ் அபராதம் உள்ளிடவற்றை எந்த வங்கிகளும் வசூலிக்கக்கூடாது. இது சிறு, குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
2. ஏற்கெனவே காலாவதியான வாகனங்களின் தகுதிச் சான்று, பர்மிட், பேட்ச், லைசென்ஸ், சாலை வரி ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.
3. சர்வதேச்ச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடையும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.
4. குறைந்த பயணிகளுடன் கால் டாக்ஸி, ஆட்டோ, மேக்சி கேப் ஆகியவையும் இயங்க அனுமதி வழங்க வேண்டும்.
5. பொதுமுடக்கம் மே 17 அன்றுடன் முடிந்தாலும் சகஜ நிலைக்குத் திரும்ப குறைந்தபட்சம் 6 மாத காலமாவது ஆகும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பேட்ச் லைசென்ஸ் வைத்துள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையாக 20,000 ரூபாய் வழங்க வேண்டும்.
6. பொதுமக்கள் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்கு மூடவேண்டும்.

இவை அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x