Published : 04 May 2020 01:28 PM
Last Updated : 04 May 2020 01:28 PM

வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களை அழைத்து வர ரூ.1 கோடி; முதல்வரிடம் வழங்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களைத் தமிழகம் அழைத்து வருவதற்கு தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதியை முதல்வரிடம் வழங்க உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மே 4) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே வேலையுமின்றி, உண்ண உணவின்றி உறங்க இடமின்றி, வரப்பே தலையணையாய் வைக்கோலே பஞ்சு மெத்தையாய் கடந்த 40 நாட்களாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிச் சீரழிகிறார்கள்.

அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய ரயில்வே அமைச்சகம் பயணச்செலவுக்கான பணத்தை அவர்களிடம் கேட்கிறது. மாற்று உடையின்றி தவிக்கும் அவர்கள் பயணச் செலவுக்கான பணத்திற்கு எங்கே செல்வார்கள் என்கிற சிறு உண்மைகூட மத்திய அரசுக்குப் புலப்படவில்லை. மாநில அரசோ, இன்னும் அதன் முடிவை தெரிவிக்கவில்லை.

எனவே இந்தக் கையறு நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி அதனுடய அறக்கட்டளையில் இருந்து ரூபாய் ஒரு கோடியை தமிழக முதல்வரிடம் வழங்குவது என முடிவு செய்திருக்கிறது. இத்தொகையை வெளி மாநிலங்களில் இருக்கிற தமிழர்களைத் தமிழகம் கொண்டு வருவதற்கு மட்டும் பயன்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x