Last Updated : 02 May, 2020 03:11 PM

 

Published : 02 May 2020 03:11 PM
Last Updated : 02 May 2020 03:11 PM

கோயம்பேடு சுமைதூக்கும் தொழிலாளர்களால் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கரோனா அச்சம்

சென்னை முழுவதும் கோயம்பேடு காய்கனி மார்க்கெட், காய் மற்றும் பழங்களை சப்ளை செய்து வருகிறது. கரோனாவால் சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சென்னை தாண்டி சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வட மாவட்டங்களுக்கும் சேர்த்து கரோனா பரவுவதாகச் செய்திகள் வருகின்றன.

கோயம்பேடு சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றிய கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 700 பேர் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களில் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து நேற்று கடலூர் திரும்பிய 607 பேர் விருத்தாச்சலம் கல்லூரி, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் உட்பட நான்கு இடங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களில் விருத்தாச்சலம் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஏழு பேருக்கு தொற்று இருப்பது முதல் கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, தொண்டங்குறிச்சியை சேர்ந்த இருவருக்கும், புட்டப்பருத்தியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதுவரையில் மொத்தம் பத்துப் பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், இன்னமும் 400 பேருக்கான முடிவுகள் வர வேண்டியுள்ளன. அதில் எவ்வளவு பேருக்கு தொற்று இருக்குமோ என்று பொதுமக்கள் மட்டுமல்லாது அதிகாரிகளுக்கும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

கடலூர் மாவட்டத்தில் நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்து வந்த நிலையில் கோயம்பேடு தொழிலாளர்களால் இப்படித் திடீரென வைரஸ் தாக்கம் அடுத்தடுத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சோதனைச் சாவடிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல கோயம்பேடு சந்தையில் பணியாற்றி அரியலூர் மாவட்டம் திரும்பிய 19 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து பரவிய தொற்றினால் சென்னையில் 50 பேர், அரியலூர் மாவட்டத்தில் 19 பேர், கடலூர் மாவட்டத்தில் 10 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் 2 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவர் என இதுவரை 82 பேர் கடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக உயர்ந்து வருவது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x