Published : 02 May 2020 01:22 PM
Last Updated : 02 May 2020 01:22 PM

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி வேளச்சேரியில் புலம்பெயர் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்: சமூக விலகல் இல்லாமல் நூற்றுக்கணக்கில் திரண்டனர்

வேளச்சேரியில் போராட்டம் நடத்திய புலம்பெயர் தொழிலாளர்கள்.

வேளச்சேரியில் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி திடீர் போராட்டம் நடத்தினர். 500க்கும் மேற்பட்டோர் சமூக விலகல் இன்றி சாலையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை முழுவதும் இப்போராட்டம் ஆங்காங்கே பரவத் தொடங்கியுள்ளது.

கரோனா தொற்று பல மாநிலங்களில் தீவிரமாகப் பரவியது. இதில் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள முக்கியப் பிரச்சினை வெளிமாநிலத் தொழிலாளர்கள் நிலைதான். அன்றாடங் காய்ச்சிகளாக கூலி வேலைக்கு வந்த அவர்கள் சிறு வியாபாரிகள், டீக்கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சாலையோர உணவகங்கள், சிறு நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வேலையைச் செய்து வந்தனர். சிலர் கூலி வேலை, கட்டிட வேலைகள் எனக் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தனர்.

ஊரடங்கு தொடங்கியவுடன் அனைத்தும் மூடப்பட்டதால் அனைவரும் வேலை இழந்து தங்குமிடம் இல்லாமல் தவித்தனர்.

தமிழகத்தில் உடனடியாக முகாம்கள் அமைக்கப்பட்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டனர். நிறுவனங்களில் பணியாற்றியவர்களை அந்தந்த நிறுவனங்களே பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் ஒரு விலக்கை அளித்தது. அதன்படி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியானது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தங்கியுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைத்துப் போராடத் தொடங்கியுள்ளனர். சென்னை வேளச்சேரியில் தனியார் நிறுவனங்களில் முடங்கியிருந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று திடீரென சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

சமூக விலகல் இன்றி 500க்கும் மேற்பட்டோர் சாலையில் வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுப்பதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதேபோன்று முகப்பேர் பகுதியிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் போராட்டம் நடத்தினர். சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். வாழ்வாதாரம், உணவு, தங்குமிடம் பிரச்சினை, நோய்த்தொற்று பயத்தால் சொந்த ஊருக்குச் சென்றாவது வாழலாம் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு முடிவெடுத்தாலும் எப்படி குறுகிய நாட்களில் அனுப்பி வைக்க முடியும் என்பது அரசாங்கத்தின் முன் உள்ள முக்கியப் பிரச்சினை ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x