Published : 30 Apr 2020 07:27 PM
Last Updated : 30 Apr 2020 07:27 PM

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைகளுக்கு வந்த லாரி ஓட்டுநருக்கு கரோனா: 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலைகளுக்கு வந்த லாரி ஓட்டுநருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு பூண்டு மூடைகள் ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டன. அங்கு பூண்டு மூடைகளை இறக்கிய லாரி, அங்கிருந்து கோவில்பட்டி அருகே உள்ள கிராமங்களுக்கு வந்து 2 தீப்பெட்டி ஆலைகளில் இருந்து தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிக்கொண்டு வெளி மாநிலத்துக்குச் சென்றது.

லாரியை நாமக்கல்லை சேர்ந்த 31 வயதுடைய ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் 32 வயதுடைய மாற்று ஓட்டுநர் ஒருவரும் இருந்துள்ளார். லாரி நாமக்கல் சென்றபோது, 31 வயது ஓட்டுநருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்த மாற்று ஓட்டுநரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கோவில்பட்டியில் இருந்து லாரி அங்கு சென்றதை அறிந்த, அங்குள்ள சுகாதார துறை, கோவில்பட்டி சுகாதார துறை துணை இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட தீப்பெட்டி ஆலைகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அன்றைய தினம் லாரியில் தீப்பெட்டிகளை ஏற்றுவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கண்டறிந்து, அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி ஷெட்டி உரிமையாளர், காவலாளி, ஒரு தீப்பெட்டி ஆலையின் மேலாளர் ஆகியோரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து தீப்பெட்டி ஆலைகள், லாரி ஷெட் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

லாரிகளுக்கு கட்டுப்பாடு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு:

இதற்கிடையில், கோவில்பட்டியில் லாரி உரிமையாளர்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

வட்டாட்சியர் மணிகண்டன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி. ஜெபராஜ், ஆய்வாளர்கள் சுகாதேவி, பத்மாவதி, சுகாதேவி, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க இணை செயலாளர் வரதராஜன், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் லாரிகளில், தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு வரும் லாரிகள் தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்திலும், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் லாரிகள் சாத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்திலும் நிறுத்த வேண்டும். லாரிகள் வந்தவுடன் அவற்றுக்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு ரத்தம், சளி மாதிரி எடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். அதன் அறிக்கை பெறப்பட்ட பின்னரே லாரிகள் ஊருக்குள் உள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கு அனுமதிக்கப்படும். லாரி ஓட்டுநர்கள் தங்குவதற்கும், உணவுக்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மே 3-ம் தேதி முதல் செய்யப்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதில், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உறுதி வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x