Published : 30 Apr 2020 06:41 PM
Last Updated : 30 Apr 2020 06:41 PM

இந்திய கடல்களில் உருவாகும் புயலுக்கு முதல்முறையாக தமிழில் பெயர்கள்: முரசு, நீர் என பெயரிடப் பரிந்துரை

கஜா புயலின் போது பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 8ம் எண் கூண்டு.

ராமேசுவரம்

புயல்களுக்கு பெயரிடும் பட்டியலில் இந்தியாவுக்கான பெயர்களில் முரசு, நீர், கதி, தேஜ், ஆக், வயோம், ஜார், புரோபஹோ, பிரபஞ்சன், குர்னி, அம்புட், ஜலாதி மற்றும் வேகா ஆகியவை இடம்பெற்றுள்ளன. அடுத்து வரும் புயலுக்கு தமிழ்ப் பெயர் வைக்கப்பட வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் புயல்கள் பல்வேறுப் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy (வில்லி வில்லி) என்று அழைக்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.

கடலில் உருவாகும் புயல்களுக்கு தனித்தனியாக பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியாவும் பின்னர் அமெரிக்காவும் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை பின்பற்றுகிறனர்.

அந்த வகையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள வங்கக் கடல், அரபிப் கடல்களில் உருவாகும் புயல்களுக்கு இந்த மண்டலத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் முதன்முறையாக 2004ம் ஆண்டில் அட்டவணையை தயாரித்தபோது இந்த எட்டு நாடுகள் சார்பில் தலா 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.

இதில் 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்ட்டு விட்டன. இதில் தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட ஆம்பான் என்ற பெயா் மட்டும் தற்போது மீதமுள்ளது.

இந்நிலையில் புதியதாக இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் புயல்களுக்கு பெயரிட உலக வானிலை அமைப்பு (WMO) புதிய பெயர் பட்டியலை தயாரித்தது. இந்தப் புதிய பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சேர்த்து ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து புதிய உறுப்பு நாடுகளும் பெயர்களை பரிந்துரைத்துள்ளன.

இந்தப் பட்டியலில் 13 உறுப்பு நாடுகளுக்கு தலா 13 புயல் பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான பெயர்களில் முரசு, நீர், கதி, தேஜ், ஆக், வயோம், ஜார், புரோபஹோ, பிரபஞ்சன், குர்னி, அம்புட், ஜலாதி மற்றும் வேகா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

169 பெயர்கள் கொண்ட பட்டியலில் 28-வது இடத்தில் 'முரசு' எனும் பெயரும், 93-வது இடத்தில் நீர் என்ற பெயரும் தமிழ் பெயர்கள் ஆகும். இந்தப் பட்டியலின் அடிப்படையில் இந்தியக் கடல்களில் இனி உருவாகும் புயலுக்கு முதன்முறையாக தமிழில் பெயர்கள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x