Published : 28 Apr 2020 02:06 PM
Last Updated : 28 Apr 2020 02:06 PM

மதுரை மாநகராட்சியில் கரோனா சமூகத் தொற்றாக பரவும் அபாயம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு- அலட்சியம் காட்டும் மக்கள்

மதுரை 

மதுரையில் தொடர்ந்து கரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் அங்கு சமூகப் பரவல் அபாயம் இருப்பதாக மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். மேலும், மக்கள் அலட்சியம் காட்டாமல் முழு ஊரடங்கு முடிந்த பின்னரும் கூட வீடுகளில் இருந்தால் சமூகப் பரவல் நிலையை எட்டாமல் தவிர்க்கலாம் என ஆலோசனை கூறுகின்றனர்.

மதுரை மாநகராட்சியில் நேற்று 27-ம் தேதி நிலவரம் அடிப்படையில் 46 பேருக்கு ‘கரோனா’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 10 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று ஏற்பட்ட 21 குடியிருப்புகளை மாநகராட்சி நிர்வாகம் ‘சீல்’ வைத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாதப்படி போலீஸாரை வைத்தும், ட்ரோன் காமிரா மூலம் கண்காணிக்கிறது.

ஆனாலும், மக்கள் மாநகராட்சி, சுகாதாரத்துறையின் ‘கரோனா’ அறிகுறி பரிசோதனைக்கு ஒத்துழைப்பதில்லை என்றும், இன்னமும் குடியிருப்புகளில் இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டம்,கூட்டமாக நின்று பேசுகின்றனர். விளையாடுகின்றனர்.

அவர்களுக்கு தற்போது வரை உலகத்தை முடக்கி வைத்துள்ள ‘கரோனா’வின் கோர முகம் தெரியவில்லை. அதிகப்பட்சமாக மேற்கு மண்டலத்தில் 22 பேர் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக வடக்கு மண்டலத்தில் 19 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மண்டலத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மண்டலத்தில் தற்போது வரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இந்த மண்டலம் குடியிருப்பு பகுதிகள் மட்டுமே ‘கரோனா’ தொற்று இல்லாமல் மக்கள் உள்ளனர்.

அதனால், இந்த பகுதிகளை மேலும் பாதுகாக்க மற்றப்பகுதிகளில் இருந்து இந்த மண்டலப்பகுதிகளுக்கு வரும் சாலைகள், தெருக்களில் போலீஸார் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்கின்றனர்.

மீறி வருவோர் வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 1-வது மண்டலம், 2-வது மண்டலம் மற்றும் 4-வது மண்டலத்திற்குட்பட்ட

ஆணையூர், செல்லூர், அண்ணாநகர், பகாநத்தம், கோமதிபுரம், சிக்கந்தர் சாவடி, குப்புபிள்ளை தோப்பு, மாப்பாளையம், மதிச்சியம்; மேலமடை, நாராயணபுரம், ரிமேடு, பெரியார் பஸ்நிலையம், ரேஸ்கோர்ஸ் காலனி, எஸ்.ஆலங்குளம், தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, வண்டியூர், மேமாசி வீதி, கூடல்நகர், அனுப்பானடி, கரிசல்குளம் உள்ளிட்ட 22 குடியிருப்புகளுக்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்து இந்த பகுதி மக்களுக்கு தேவையான காய்கறி, பால், மளிகைப்பொருட்கள் மற்றும் மருந்துகளை நேரடியாக வீடு தேடிச் சென்று வழங்குவதற்கு உதவி மையங்களை உருவாக்கி உள்ளது.

தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் மாநகராட்சிகளில் மட்டுமே ‘கரோனா’தொற்று வேகமும், பரவலும் அதிகமாக உள்ளது.

அதனால், இந்த 4 மாநகராட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பு நடவடிக்கைளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கை நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மதுரையில் இன்னும் சமூக பரவல் நிலை ஏற்படவில்லை. நெருக்கமாக பழகிய, வசித்தவர்களுக்கு நோயாளிகளிடம் இருந்து சில பகுதிகளில் பரவியுள்ளது.

அவர்களைப் பரிசோதனை செய்ததில் பெரியளவில் பாசிட்டிவ் நோயாளிகள் வரவில்லை. தொடர்ந்து ‘சீல்’ வைக்கப்பட்டப்பகுதிகளில் மக்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை துரிதமாக நடந்து வருகிறது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x