Published : 27 Apr 2020 11:15 AM
Last Updated : 27 Apr 2020 11:15 AM

மழையில் சேதமுற்ற நெல்லுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்குக; வாசன்

நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.27) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான மதிப்பிலான நெல் மூட்டைகளும் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமுற்றன. தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலும், வேளாண் விற்பனை மையங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று அதிகாலை திடீரென்று பெய்த மழையால் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்ததற்கு விவசாயிகள் பொறுப்பாக முடியாது. மேலும், கரோனா பரவலில் ஊரடங்கு அமலில் இருக்கின்ற போது கோடை காலத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கின்ற நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்பட்டிருப்பது எதிர்பாராத நிகழ்வாகும்.

இருப்பினும், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கின்ற நெல் மூட்டைகளை மழை, வெயில் என எக்காலத்திலும் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு பயன் தரும். எனவே, இனிமேல் வரும் நாட்களில் நெல் கொள்முதல் நிலையத்தையும், நெல் மூட்டைகளையும் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் நாட்களில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு என வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டிருப்பதால் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். கரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரச் சிக்கலில் இருக்கின்ற நெல் விவசாயிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள இழப்பு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

எனவே, மழையால் நனைந்து சேதமுற்ற நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய தொகையை வழங்கவும், இனிமேல் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x