Last Updated : 27 Apr, 2020 09:32 AM

 

Published : 27 Apr 2020 09:32 AM
Last Updated : 27 Apr 2020 09:32 AM

பத்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு எதிர்மறை உளவியல் அழுத்தம்; தேர்வை ரத்து செய்ய கோரும் தமிழக-புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்

கரோனா அச்சுறுத்தலால் பத்தாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்கு எதிர்மறையான உளவியல் அழுத்தம் உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு இல்லை என்று அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத்தலைவர் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, மாநில செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக அளித்துள்ள மனு விவரம்:

"தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் மேனிலை கல்வியில் சேரவும், பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழிற்சார்ந்த கல்வியில் சேரவும் எஸ்எஸ்எல்சி தேர்வை அவசியம் நடத்த வேண்டும் என்ற நிலைக்கு வந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

ஆனால், இந்த அசாதாரண சூழலில் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இவர்களுக்குக் கரோனா தொற்று உருவாக வாய்ப்புண்டு. குறிப்பாக, பத்தாம் வகுப்புத் தேர்வை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்று சூழல் ஏற்படலாம்.

அரசு தொலைக்காட்சி மூலமும், இணையம் மூலமும் நடத்தும் பத்தாம் வகுப்புப் பாடங்கள் பெரும்பாலான மாணவ, மாணவிகளை சென்று சேர்வதில் பல இடர்பாடுகள் உள்ளன.

கரோனா பாதிப்பில் உருவாகியுள்ள அசாதாரண சூழல் மாணவர்களிடத்தில் கற்பதற்கு சாதகமற்ற எதிர்மறையான உளவியல் அழுத்தங்களை உருவாக்கியுள்ளது.

பள்ளிச்சூழலில் சில வாரங்களாவது படித்தப் பின்பு தேர்வு வைக்க வேண்டும் என்று அரசு பள்ளி தரப்பில் கோரிக்கை எழுகிறது. அப்படி ஒரு மாதம் சென்றாலும் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று உறுதியாக கூற இயலாது. குறைந்தபட்சம் ஒரு மாதம் பத்தாம் வகுப்புக்கு ஒதுக்கிவிட்டால் புதிய பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு மையப்பள்ளிகளில் மற்ற வகுப்பு குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். இந்த பத்தாம் வகுப்பு மாணவர்களும் 11-ம் வகுப்பில் காலத்தில் ஒரு மாதத்தை இழக்க நேரிடும்.

பெரும்பாலான மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பொதுப் போக்குவரத்தைதான் நம்பியுள்ளனர். இத்தகைய பயணங்கள் சமூக பரவல் உருவாக வாய்ப்பளிக்கும்.

தேர்வு நடத்தும்போதும், விடைத்தாள் திருத்தும்போதும் கரோனா முன்னெச்சரிக்கை சமூக இடைவெளி, கையை கழுவுதல் பின்பற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல் ஆகியவை பல இடர்பாடுகளை ஏற்படுத்தும்.

அதனால், தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு இல்லை என்று அறிவிக்கலாம். ஆண்டுதோறும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் 97 சதவீதம் தேர்ச்சி இருந்திருக்கும். அதற்கு பதிலாக அனைவரும் தேர்ச்சி என்றால், பள்ளி மாணவர்களில் ஏறத்தாழ 3 சதவீதத்தினரும், தனித்தேர்வர்களில் குறைந்த அளவிலும் தேர்ச்சி பெறுவர். குறைந்தப்பட்ச தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களால் படிக்க முடிந்த பாடப்பிரிவுகளிலோ, தொழிற்கல்வியிலோ சேர்வார்கள்.

மேலும், கல்வித்துறையானது திருப்புதல் தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர்களின் சராசரி சதவீதத்தையும் அதன் வளர்ச்சியையும் அறிய முடியும். அந்த மதிப்பெண்கள் இஎம்ஐஎஸ் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஏ, பி, சி என மூன்று கிரேடுகளை தரமுடியும். தனித்தேர்வர்களுக்கு சி கிரேடு தரலாம்.

கரோனா பேரிடர் காலச்சிறப்பு சான்றிதழில் கிரேடு, பெயர், வயது போன்றவை வழக்கமான சான்றிதழை போல இடம் பெற செய்யலாம். தேர்வு இல்லாவிட்டால் ஏற்படும் அனைத்து சிக்கல்களுக்கும் இந்த சான்று தீர்வாக இருக்கும். மேனிலை வகுப்புகள், தொழிற்பிரிவுகளில் சேர்ந்து தனது எதிர்காலத்தை வடிவமைக்க அடுத்தத் தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்"

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x