Published : 22 Apr 2020 04:49 PM
Last Updated : 22 Apr 2020 04:49 PM

சொந்த நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்; உதவ இணையதளம் தொடங்கிய சுற்றுலாத்துறை அமைச்சகம் 

சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் சுற்றுலா நகரங்களில் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் விவரத்தைப் பதிவு செய்வதற்கு இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா ஊரடங்கால் இந்தியாவுக்கும், தமிழகத்தின் பிற மாநிலங்களுக்கும் சுற்றுலா சென்ற வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் திரும்ப முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், அந்தந்த மாவட்ட, மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள் மூலம் அவர்களை மீட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம், வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. அப்படியிருந்தும் கோடை வாசஸ்தலங்கள், மலைப்பிரதேசங்களில் இன்னும் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல் அங்கேயே முடங்கிப்போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு அவர்களைப் பாதுகாப்பாக அவர்கள் நாட்டுக்கும், மாநிலத்திற்கும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படுவதற்காகவே இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள், தங்கள் மாவட்டங்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் விவரத்தை இந்த strandedinindia.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதற்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் உதவுகிறது.

சுற்றுலாத்துறை அதிகாரிகள் வழியாகவும், சுற்றுலாப் பயணிகளும் நேரடியாக விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதில் சுற்றுலாப்பயணிகள் பெயர், தொடர்பு எண், அவர்கள் நாடு, மாநிலம், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x