Published : 22 Apr 2020 04:08 PM
Last Updated : 22 Apr 2020 04:08 PM

குப்பைத் தொட்டியில் முகக் கவசங்கள்: தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா அபாயம்; தனிப்பையில் சேகரித்து ஒப்படைக்க மதுரை மாநகராட்சி வேண்டுகோள் 

மதுரை 

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முகக் கவசங்களையும், கையுறைகளையும் குப்பையில் போடுவதால் அதை அப்புறப்படுத்தும் தூய்மைக் காவலர்களுக்கு ‘கரோனா’ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் முகக்கவசங்கள், கையுறைகளை தூய்மைக் காவலர்களிடம் பாதுகாப்பாக வழங்க மதுரை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் ‘கரோனா’ வேகமாகப் பரவும் மாவட்டங்களில் மதுரை முக்கியமானது. இந்த மாவட்டத்தில் டெல்லி நிகழ்வுக்குச் சென்று வந்தவர்கள் மட்டுமில்லாது அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் பரவியுள்ளது. தற்போது அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். ‘கரோனா’வுக்கு மதுரையில் பாதித்த முதல் நபர் மட்டும் உயிரிழந்துள்ளார். தற்போது ‘கரோனா’வில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால் வாங்க மக்கள் வெளியே வருகின்றனர். அவர்கள் அப்போது முகக்கவசம், கையுறை அணிந்து வருகின்றனர்.

அவர்கள் வீட்டிற்குச் சென்றதும் அதைக் கழற்றி குப்பையில் வீசியெறிகின்றனர். மாநகராட்சித் தூய்மைக் காவலர்கள், அந்தக் குப்பைகளை எடுத்துச் சென்று உரக்கிடங்கிற்கு அனுப்புகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மட்டுமே முகக்கவசங்கள், கையுறைகளைப் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

ஆனால், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் வைத்துள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமலே அப்புறப்படுத்துகின்றனர். அதனால், குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் முகக்கவசம், கையுறைகளைப் பயன்படுத்தும் ‘கரோனா’ தொற்றுள்ளவர்கள் அதைக் குப்பைத் தொட்டியில் போட்டால் அதை அப்புறப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த தொற்று வர வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை குப்பைகள் மற்றும் பொது இடங்களில் போடாமல் தனிப்பையில் சேகரித்து வீட்டிற்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x