Published : 22 Apr 2020 14:22 pm

Updated : 22 Apr 2020 14:23 pm

 

Published : 22 Apr 2020 02:22 PM
Last Updated : 22 Apr 2020 02:23 PM

பாத சிகிச்சை மூலம் தூய்மைப் பணியாளர்களின் வலி போக்கும் பாஸ்கர்

healing-treatment-to-sanitary-workers

உயிர் காக்கும் மருத்துவர்களுக்கே மயானத்தில் இடம் தர மறுக்கும் அளவுக்கு கரோனா வைரஸ் தன் கோரமுகத்தைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி வைத்திருக்கிறது. உலகமே கரோனாவைக் கண்டு அஞ்சி வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த செ.பாஸ்கர் தினமும் தூய்மைப் பணியாளர்களை நோக்கிச் செல்கிறார். அவர்களுக்கு இவர் செய்யும் சேவை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.

ஒவ்வொரு நாளும் மாலையில் புதுவையின் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார் பாஸ்கர். அங்கு பணி முடிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை அமரவைத்து அவர்களின் பாதங்களுக்கு பாத அழுத்த சிகிச்சை மேற்கொள்கிறார். அரோமா மூலிகை எண்ணெய் தடவி கால்களை நீவி விடுகிறார்.

பாதங்களில் அவர் கொடுக்கும் அழுத்தம் உடலின் அத்தனை பாகங்களையும் தட்டி எழுப்புகிறது. சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பணியாளர்கள் தங்களை மறந்து அப்படியே உறங்குகிறார்கள். சிகிச்சை முடிந்து எழும்போது, “என் காலே லேசானது மாதிரி இருக்குங்க, உடம்பு அப்படியே புதுசா ஆனது மாதிரி இருக்குங்க” என்று கைகூப்பி நன்றி சொல்கிறார்கள்.

பாஸ்கர்

கரோனா காலத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவே அஞ்சும் நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இப்படியொரு சேவை, அதுவும் இலவசமாகச் செய்ய முன்வந்தது ஏன் என்ற கேள்வியோடு கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆதி அந்தம் சிகிச்சை மையம் வைத்திருக்கும் செ.பாஸ்கரிடம் பேசினேன்.

“துப்புரவுப் பணியாளர்கள்தான் அதிகம் உழைக்கிறாங்க. காலைல 4 மணிக்கு எந்திரிச்சு ராத்திரி பத்துமணிக்கு படுக்கிறாங்க. இவங்க வேலை பூராவும் நின்னுகிட்டே செய்யணும். அதால காலில் ரத்தம் ஓட்டம் கொறைஞ்சுபோய் பாதவலி, குதிகால்வலி, பாத எரிச்சல், மன அழுத்தம் உட்பட ஏராளமாக பிரச்சினைகள் வரும்.

உடம்பு ரொம்ப சோர்ந்துடும். நாம கத்துக்கிட்ட கலைய இந்தப் பேரிடர் காலத்துல அதை எதிர்த்துப் போராடுற இவங்களப் போன்றவர்களுக்கு பயன்படுத்தணும்னு நினைச்சுத்தான் இதைச் செய்றேன். சிகிச்சை எடுத்துக்கிறவங்க ரொம்ப சந்தோசமா ஆயிடுறாங்க. உடலில் எந்த பாகத்துல பிரச்சினை இருந்தாலும் பாதத்துல தெரிஞ்சுடும். உடம்போட ரெண்டாவது இதயம் பாதம். இதன் மூலமாவே பெரும்பாலான பிரச்சினைகளை சரி செஞ்சுடலாம். அதத்தான் அந்த தொழிலாளர்களுக்கு செய்யுறேன். போலீஸ்காரங்களும் இதேபோலத்தான் கஷ்டப்படறாங்க. அதனால அவங்களுக்கும் இந்த சிகிச்சைய செய்றேன்.

ஒருநாள் இவங்களுக்கு, அடுத்த நாள் அவங்களுக்கு. ஒருநாளைக்கு 15 பேருக்குத்தான் சிகிச்சையளிக்க முடியுது. தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த சிகிச்சையை செஞ்சுடணும்கிறதுதான் இப்போதைய செயல்திட்டம். ஒருமுறை செஞ்சுட்டா ஒரு மாசத்துக்கு உடம்புல எனர்ஜி அப்படியே இருக்கும்” என்கிறார் பாஸ்கர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Healing treatmentSanitary workersபாத சிகிச்சைதூய்மைப் பணியாளர்கள்பாஸ்கர்கரோனாஊரடங்குகொரோனாசிகிச்சை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author