Published : 17 Apr 2020 09:08 PM
Last Updated : 17 Apr 2020 09:08 PM

மதுரையில் சித்திரைத்திருவிழா நடைபெறாது: மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் அறிவிப்பு 

மதுரை

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் கூடும் சித்திரைத்திருவிழா நடைபெறாது என்று மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் வருகிற 25ம் தேதி கொடியற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்க இருந்தது. தற்போது நடக்கும் அசாதாரண சூழ்நிலையில் இந்த திருவிழா கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும் பக்தர்களின் ஆத்ம திருப்திக்காகவும் தலபுராணத்தின்படி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும். நித்திய பூஜைகளுடன் சேர்த்து மே 4ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைப்பார்கள்.

இந்த நிகழ்வினை பக்தர்கள் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோயில் இணைய தளத்தில்(www.maduraimeenakshi.org) நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாண வைபவ உற்சவத்தின்போது ‘திருமாங்கல்ய மங்கல நாண்’ திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் பெண்கள், காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கலநாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x