Last Updated : 17 Apr, 2020 03:47 PM

 

Published : 17 Apr 2020 03:47 PM
Last Updated : 17 Apr 2020 03:47 PM

ஊரடங்கால் தவிக்கும் சாலையோரம் வசிக்கும் நாய், பூனைகள்; உணவும், முதலுதவியும் தர புதுச்சேரியில்  புது முயற்சி

ஊரடங்கில் பசியால் வாடும் மனிதர்களுக்குப் பலர் உணவிடுவது போன்று உணவுக்காக ஏங்கும் விலங்குகளைத் தேடிச் சென்று நாள்தோறும் 150 பிராணிகளுக்கு புதுச்சேரியில் உணவும், தேவைப்படும் விலங்குகளுக்கு முதலுதவியும் அளிக்கிறது பிராணிகள் நலப் பாதுகாப்பு இயக்கம்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள், உணவு விடுதிகள் தொடங்கி தேநீர்க் கடைகள் வரை மூடப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் மட்டுமல்லாது தெருவோரம் வசிக்கும் நாய், பூனை பிராணிகளும் உணவில்லாமல் தவித்து வருகின்றன. வழக்கமாக சாலையோரம் திரியும் விலங்குகளுக்கு கடைகளில் சாப்பிட வருவோர் தொடங்கி பலரும் உணவிடுவது வழக்கம். தற்போது யாரும் வெளியில் வராததால் அவை உணவின்றி தவிக்கத் தொடங்கின. மனிதர்களுக்கு உதவுவதுபோல் பிராணிகளுக்கும் பலரும் சத்தமின்றி உணவிடுகின்றனர்.

புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தினர் தற்போது நாள்தோறும் 150 பிராணிகளுக்கு உணவும், தேவைப்படும் பிராணிகளுக்கு முதலுதவியும் தரத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக இயக்கத்தின் தலைவரும் கால்நடை மருத்துவருமான செல்வமுத்து கூறுகையில், "ஊரடங்கால் பல இடங்களில் பிராணிகள் பசியில் உள்ளன. தங்கள் பகுதிகளில் இருக்கும் கால்நடைகள் மற்றும் தெருவோரப் பிராணிகளான நாய், பூனை போன்றவற்றுக்கு உணவு அளித்து அவற்றின் பசியைப் போக்க முன்வர வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் உணவகங்கள் இல்லாத காரணத்தால் எஞ்சிய உணவுப் பொருட்கள் இல்லாத சூழ்நிலையில் உணவு கிடைக்காமல் பிராணிகள் பட்டினியால் வாடுகின்றன. கோடை வெப்பத்தின் தாக்கமும், பசியும் பிராணிகளின் குணாதிசயங்களை மாற்றும். குறிப்பாகச் சண்டையிட்டு அதனால் விலங்குகளுக்குக் காயம் உண்டாகி கிருமித் தொற்று உருவாகவும் வாய்ப்புண்டு.

நாமும் நம் வீட்டருகே சாலையில் வசிக்கும் பிராணிகளுக்கு உணவு மற்றும் நீர் கொடுப்பதன் மூலம் அவற்றின் பசியைப் போக்கலாம். அதன் வாழ்வாதாரத்தைக் காப்பதுடன் மனித நலத்தையும் பேணிக் காக்க முடியும். வீட்டின் வெளியே பிராணிகள் குடிக்கத் தண்ணீர் குவளை வைக்கலாம். அதேபோல் பிராணிகளுக்கு இரவோ, பகலோ நாம் சாப்பிடும் உணவில் பகிர்ந்து தரலாம்.

ஆட்சியரிடம் அனுமதி பெற்று எங்கள் அமைப்பில் பிராணிகளுக்கு உணவிட 7 பேருக்கு அனுமதி கிடைத்தது. காலையில் பிராணிகளுக்கான உணவு, பிஸ்கட் ஆகியவை நகரப்பகுதிகளில் 150 பிராணிகளுக்கு கிடைக்கும் வகையில் உணவிடுகிறோம். மாலையில் சாப்பாடு தருகிறோம். கிராமப்பகுதி வரை சென்று பணியாற்ற அனுமதி இல்லாததால் நாமே நம் இல்லம் அருகே உணவும், நீரும் தரலாம் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஊரடங்கு உத்தரவால் தெருவோர விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. ஆதலால் புதுச்சேரி நகரப் பகுதிகளில் ஏதேனும் விலங்குகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தங்களின் இயக்கத்தை 95003 65984 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x