Published : 14 Apr 2020 06:38 AM
Last Updated : 14 Apr 2020 06:38 AM

கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சென்னை

கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதியவர்களின் சராசரிவயது 78 ஆக உள்ளது. இறந்தோரின் 99 சதவீதம் பேருக்கு ஏற்கெனவே ஏதோ ஒரு நோய் இருந்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான வைரஸ்கள் முதியவர்களை அதிகம் தாக்குவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுதான்.

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

இப்பருவத்தில்தான் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், மறதி ஏற்படுகின்றன. இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.

இவைதவிர ஸ்டீராய்டு உள்ளிட்ட சில மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்.

மேலும் முதியோர் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். அதனால், எந்த ஒரு தொற்றுநோயும் இவர்களை எளிதில் தாக்கலாம். இப்படித்தான் கரோனா வைரஸும் முதியோரை அச்சுறுத்துகிறது.

சாதாரண ஃப்ளூ காய்ச்சலுக்கு வரும் தொல்லைதான், கரோனா வைரஸிலும் ஆரம்பத்தில் ஏற்படும்.உடல் வலி, சோர்வு, தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் போன்றவை ஒருசில நாட்கள் இருக்கும். 2 அல்லது 3 நாட்கள் கழித்து லேசான காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். பசி குறையும், சுமார் ஒரு வாரத்துக்குப் பின்பு தொண்டை வலி, உடல் சோர்வு அதிகரிக்கும்.

இச்சமயத்தில்தான் காய்ச்சல் அதிகரித்து குளிரும் ஏற்படும். வயிற்றுப்போக்கு இருக்கும். இதன் அடுத்த கட்டமாக மூச்சுத் திணறல் ஏற்படும்.

20 வயது இளைஞரின் நுரையீரல் போல் 60 வயது முதியவரின் நுரையீரல் இருக்காது. எனவே, முதியோருக்கு கரோனா வைரஸின் பாதிப்புஅதிகம் இருக்கும். இப்படி நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்போது, வெண்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை தர வேண்டும்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லையென்றால், சிறுநீரகம் செயலிழக்கும். நேரடியாக கரோனா பாதிப்பை வராமல் தடுக்கவோ, குணப்படுத்தவோ எந்த மருந்தும் இல்லை.

முதியோர் பாதுகாப்பு

இந்தப் பாதிப்பில் இருந்து முதியோரை பாதுக்காப்பது எப்படி என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேர்கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டுமெனில் முகக்கவசம் அணிந்து செல்லலாம்.

வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு போட்டு நன்றாக கைகளை கழுவ வேண்டும்.

மருத்துவ ஆலோசனை அவசியம்

நோயின் ஆரம்ப அறிகுறிகளான தொண்டைக்கட்டு, உடல் வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்தால்உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.முதியோர் தங்கள் பேரக் குழந்தைகளை கொஞ்சிப் பேசுவதையும், முத்தமிடுவதையும் தவிர்க்கலாம்.

கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது மூன்று அடி தூரம் விலகி நின்று பேசுவது நல்லது.

குளிர்ச்சியான பானங்கள், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மிதமான சூட்டில் வெந்நீர் அடிக்கடி அருந்துவது ஆரோக்கியத்தைக் கூட்டும்.

உணவில் சிறப்பு கவனம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொட்டை வகைகள், பாகற்காய், தேன், காளான், பூண்டு, இஞ்சி, தயிர்,மிளகு போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். பிராணா யாமம், தியானம் போன்றவற்றை தொடர்ந்து செய்யலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் டி உதவி செய்யும். அதனால், முதியோர் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படுமாறு உட்கார வேண்டும் அல்லது நடைப்பயிற்சி செய்யலாம்.

கண் புரை, மூட்டு அறுவை சிகிச்சைகளை சில நாட்கள் தள்ளி வைக்கலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவசியம் ரத்தப் பரிசோதனை செய்து தங்களுடைய சர்க்கரையின் அளவை இன்சுலின் அல்லது மாத்திரைகள் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x